×

மாமல்லபுரத்தில் கூட்டம் நடத்திய விவகாரம்: வழக்கை ரத்து செய்யக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் மனு; தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை:  மாமல்லபுரத்தில் கடந்த 2012 மே 5ம் தேதி நடந்த வன்னிய இளைஞர் பெருவிழா பொதுக்கூட்டத்தை  அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து  நடத்தியதாக,  மாமல்லபுரம் காவல் நிலையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்,  தலைவர் ஜி.கே.மணி,  துணைப் பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், இளைஞரணி தலைவர் அன்புமணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.   செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி  ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.மணி, திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகிய நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.  மனுவில், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

 இந்த மனு  நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று பாமக தரப்பு வக்கீல் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது.  மனுதாரர்கள் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த மனு தொடர்பாக மாமல்லபுரம் டி.எஸ்.பி., காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Tags : Mamallapuram ,Ramadas ,Baumaka ,Court , Meeting in Mamallapuram: Pama founder Ramdas Manu seeks cancellation of case; High Court refuses to impose injunction
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...