நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா? எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தது. தமிழகத்தை பொறுத்தவரை அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை நிறைவேற்ற நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அனைவரது நிலைபாடு. நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில் நான் பேசும்பொழுது, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தீர்களே, என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், நீட்டின் பின் விளைவுகளை அறிவதற்கு கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

கமிஷனின் பரிந்துரைகளின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பதில் அளித்தார். தற்போதைய அரசின் இந்த முடிவால், நடப்பு ஆண்டு நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயராக வேண்டுமா? வேண்டாமா? என்று புரியாமல் தவித்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தினுடைய வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியே தீரும் என்று அகில இந்திய மருத்துவ கல்வி கழகம் அறிவித்துள்ளது. தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றே தீருவோம் என்று வாக்குறுதி தந்த இந்த அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிஷன் பரிந்துரைகள் வருவதற்கு முன்பு, தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>