×

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா பாஜ? எல்.முருகன் பரபரப்பு பேட்டி

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் என்று பாஜ அறிவித்துள்ளது.  சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் 116வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் அவரது படத்திற்கு தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, ம.பொ.சிவஞானத்தின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.தொடர்ந்து எல்.முருகன் அளித்த பேட்டி: சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழக தலைவர்களை போற்றுவது பாஜவின் வழக்கம். அந்த வகையில் ம.பொ.சிவஞானம் 116வது பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த பாஜ செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம்.

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜ தயாராக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும். பாஜ நிர்வாகிகள் மீது பாலியல் புகார் தொடர்பாக செய்தி வெளியிட்டது தொடர்பாக சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எச்.ராஜா மீது பாஜ நிர்வாகிகள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும். ம.பொ.சிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார். அதிமுக கூட்டணியில், முதலில் பாஜவுக்கு 60 தொகுதிகள் வரை கேட்டது. இதற்காக பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பாஜவுக்கு அவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. அதிக தொகுதிகளை ஒதுக்கினால் பாஜ தோல்வியை தான் சந்திக்கும்.

மக்கள் மத்திய அரசு மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். இதனால், நாங்கள் கொடுக்கும் சீட்டை வாங்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிடுங்கள் என்று பிடிவாதமாக கூறி விட்டது. அதிமுக, பாஜ தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. தேர்தல் நெருங்கி வந்ததால் பாஜ யாருடனும் கூட்டணி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அதிமுக கொடுக்கும் சீட்டை பெற்றுக் ெகாண்டு கடைசி நேரத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க முடிவு செய்தது.  இதையடுத்து அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், கேட்ட தொகுதிகள் எதுவும் வழங்கப்படவில்லை. பாஜ பலமாக இருக்கும் என்று கருதப்பட்ட தொகுதிகளை கூட அதிமுக ஒதுக்கவில்லை என்று பாஜ நிர்வாகிகள் அப்போது குற்றம் சாட்டி வந்தனர். மேலும், தேர்தல் முடிவில் 4 தொகுதிகளில் மட்டுமே பாஜ ெவற்றி பெற்றது.

 மற்ற தொகுதிகளில் பாஜ தோல்வியை தழுவியது. தேர்தல் தோல்விக்கு அதிமுக அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளே காரணம் என்று பாஜ தலைவர்கள் சிலர் வெளிப்படையாக பேச தொடங்கினர். இதனால், இந்த கூட்டணி தொடருமா? என்ற கேள்வியும் எழுந்தது.  இந்நிலையில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. பாஜவும் தேர்தலை சந்திக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் என்று பாஜ தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி கூட்டணிக்குள் மீண்டும் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Murugan Broadcast , Is BJP leaving AIADMK? L. Murugan sensational interview
× RELATED சட்டசபை தேர்தல் செலவுக்கு பாஜ...