×

சொத்து குவிப்பு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை 3வது நீதிபதி ஜூலை 22ல் விசாரிக்கிறார்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது  லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுத்த சொத்துக்குவிப்பு புகார் மீது நடவடிக்கை  எடுக்க கோரிய வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமாரை  நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  கடந்த 2011 முதல் 2013 வரை  வருமானத்துக்கு  அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்ற  மதுரை கிளையில்  தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன், 2013ம் ஆண்டு  வழக்கு  தொடர்ந்தார்.   அதில், ராஜபாளையம் தேவதானம் மற்றும் திருத்தங்கல் வீடு, நிலங்களை வாங்கி உள்ளார். இதன் மதிப்பு 1 கோடிக்கும் அதிகம். மேலும், வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 7 கோடிக்கும் அதிகமாக  சொத்து சேர்த்துள்ளார். இது தொடர்பாக  லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்  அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எனது புகார் மனு மீது நடவடிக்கை  எடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று  கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் கடந்த ஏப்ரல் மாதம்  விசாரணைக்கு வந்தது.  வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை தாக்கல்  செய்யப்பட்டது. அதில், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011 மே 23 முதல்  2013 ஏப்ரல் 20 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி  வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான புகார்கள் தொடர்பாக  விசாரணை நடத்தப்பட்டது.   விசாரணை நடத்திய அதிகாரி, புகாரில் எந்த  முகாந்திரமும் இல்லை. இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்க தேவையில்லை. அதனால்  விசாரணையை தொடர வேண்டியதில்லை என்று  கூறி வழக்கை முடிக்கவும் பொது துறை உத்தரவிட்டதாக கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜி அமைச்சரான பிறகு சேர்த்த  சொத்து குறித்து மட்டும் விசாரிக்க கூடாது. 1996ம் ஆண்டு திருத்தங்கல்  பேரூராட்சி துணை தலைவரானது முதல் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவருடைய  வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று  உத்தரவிட்டனர்.  அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது,  ஆரம்ப கட்ட விசாரணையில் போதிய முகாந்திரம் இல்லை, அரசு அனுமதித்துள்ள அளவுக்குள்ளாகவே அவரது வருமானம் உள்ளது என்றார்.   இந்த வழக்கில் கடந்த  ஏப்ரல் 3ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும்  ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட  தீர்ப்பளித்தனர். முதலில் தீர்ப்பை வாசித்த  நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர்  ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க  வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரத்தில் நீதிபதி ஹேமலதா, நீண்ட  இடைவெளிக்கு பிறகு வழக்கு பதிந்து விசாரிப்பது செத்த குதிரையின் மீது  சவுக்கடி கொடுப்பது போல் ஆகும் என்பதால், மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித  பலனும் இல்லை என்று கூறி மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாக  தீர்ப்பளித்துள்ளார்.
 இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால்  வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பது குறித்து முடிவெடுக்க வழக்கை தலைமை  நீதிபதிக்கு அனுப்பி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.அதன்படி  இந்த வழக்கை விசாரிக்கும்  3வது நீதிபதியாக எம்.நிர்மல்குமார்  நியமிக்கப்பட்டார். அவர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான ஆவணங்களை அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின்  மீதான விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



Tags : Rajendra Balaji ,Chennai iCourt , 3rd judge hears July 22 case against former minister Rajendra Balaji: Chennai I-Court orders
× RELATED மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல்...