×

மகளிர் கிரிக்கெட் ஒருநாள் தொடர் முதல் போட்டியில் இன்று இந்தியா - இங்கிலாந்து மோதல்

பிரிஸ்டல்: இந்தியா - இங்கிலாந்து  மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி ஒரு டெஸ்ட், தலா 3 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுகிறது.டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில்  ஒருநாள் தொடர் இன்று பிரிஸ்டலில் தொடங்குகிறது. தொடர்ந்து 2வது ஒருநாள் ஜூன் 30ம் தேதி டான்டனிலும், 3வது ஒருநாள் ஜூலை 3ம் தேதி  வொர்செஸ்டரிலும் நடைபெற உள்ளன. மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் போட்டியில் கடுமையாகப் போராடி டிரா செய்தது அனைவரது பாராட்டுகளையும் அள்ளியது. கொரோனா பரவலுக்கு பிறகு பல மாதங்களாக  சர்வதேச போட்டிகளில் விளையாடாதது, போதிய பயிற்சி இல்லாதது என சில பின்னடைவுகள் இருந்தாலும், இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு அசத்தினர். குறிப்பாக ஷபாலி, மந்தனா, டானியா, தீப்தி, ஸ்நேஹ் ராணா ஆகியாரின் ஆட்டம் அமர்க்களமாக இருந்தது.  

இந்த நிலையில், ஒருநாள் போட்டித் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் இரு அணிகளும் வரிந்துகட்டுவதால், பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் இன்று நடக்கும் முதல் போட்டியில் அனல் பறப்பது உறுதி.  இந்தியா: மித்தாலி ராஜ் (கேப்டன்), ஹர்மான்பிரீத் கவுர் (துணை கேப்டன்), டானியா பாட்டியா, ஏக்தா பிஷ்ட், ஜுலன் கோஸ்வாமி, ஸ்மிரிதி மந்தனா, ஷிகா பாண்டே, பூனம் யாதவ், பிரியா பூனியா, ஸ்நேஹ் ராணா, பூனம் ராவுத், அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிகியூஸ், இந்திராணி ராய், ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ராகர், ராதா யாதவ். இங்கிலாந்து: ஹீதர் நைட் (கேப்டன்), நதாலியே ஸ்கிவர் (துணை கேப்டன்), எமிலி அர்லாட், டாமி பியூமான்ட், கேதரின் பிரன்ட், கேத் கிராஸ், பிரெயா டேவீஸ், சோபியா டங்க்லி, சோபி எக்லஸ்டோன், டாஷ் பாரன்ட், சாரா கிளென், ஏமி ஜோன்ஸ், அன்யா ஷ்ரப்சோல், மேடி வில்லியர்ஸ், பிரான் வில்சன், வின்பீல்டு ஹில்.

Tags : India ,England , India-England clash in the first match of the women's cricket ODI series today
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!