ஹோம்பர்க் ஓபன் டென்னிஸ்: கெர்பர் சாம்பியன்

பெர்லின்: ஜெர்மனியில் நடந்த முதலாவது பேட் ஹோம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உள்ளூர் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இங்கிலாந்தில் நாளை தொடங்க உள்ள  புல் தரையில் நடக்கும் போட்டியான விம்பிள்டன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிக்கு முன்னோட்டமாக  நடந்த இந்த தொடரின் இறுதிப் போட்டியில் கெர்பர் (28வது ரேங்க்), செக் குடியரசின்  கேத்ரினா சினியகோவா (76வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர். சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் உற்சாகமாக விளையாடிய கெர்பர் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று  சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.  இந்த ஆட்டம் ஒரு மணி 25 நிமிடத்துக்கு நடந்தது. கெர்பர் வென்ற 13வது டபுள்யு.டி.ஏ பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெலனா அசத்தல்: இங்கிலாந்தின்  ஈஸ்ட்போர்ன் நகரில் நடந்த வைகிங் சர்வதேச ஓபன்  டென்னிஸ்  போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், லாத்வியா வீராங்கனை ஜெலனா ஓஸ்டபெங்கோ (43வது ரேங்க்) கோப்பையை முத்தமிட்டார்.  இறுதிப்போட்டியில் எஸ்டோனியாவின் அனெட் கோன்டாவெய்ட் (27வது ரேங்க்) உடன் மோதிய  ஜெலனா  ஒரு மணி 5 நிமிடங்களில்  6-3, 6-3  என நேர் செட்களில்  வென்றார். இந்த வெற்றிகளால் உற்சாகம் அடைந்துள்ள பிரெஞ்ச் ஓபன் முன்னாள் சாம்பியனான ஜெலனா,  ஆஸி., யுஎஸ், விம்பிள்டன் தொடர்களில் முன்னாள் சாம்பியனான கெர்பர்  இருவரும் நாளை தொடங்கும் விம்பிள்டன் தொடரில் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குகின்றனர்.

Related Stories:

>