×

நாளை முதல் 27 மாவட்டங்களில் 9,333 பேருந்துகள் இயக்கப்படும்: பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை: நாளை முதல் 50 சதவிகித பயணிகளுடன், ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்கள் என என மொத்தம் 27 மாவட்டங்களில், 9,333 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக அமலில் உள்ள, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, 28ம் தேதி முதல் 5ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் வகை 2ல் குறிப்பிட்டுள்ளவாறு, அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,

ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் பொது பேருந்து போக்குவரத்தினை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல், 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வகை 3ல் குறிப்பிட்டுள்ளவாறு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்தை நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல், 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது.  

அதனடிப்படையில், ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்கள் என ஆக மொத்தம் 27 மாவட்டங்களில், வரும் 28ம் தேதி முதல் காலை 6 மணி முதல் 50 சதவிகித இருக்கைகளுடன், மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள மொத்தம் 19,290 பேருந்துகளில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2,200 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 365 பேருந்துகளும், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2,210 பேருந்துகளும், சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 513 பேருந்துகளும், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,592 பேருந்துகளும்,

மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,300 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,153 பேருந்துகள் என மொத்தமாக 9,333 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இயக்கப்படுகிற பேருந்துகளை உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு விதித்துள்ள வழிகாட்டு முறைகளான, கட்டாய முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பயணம் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Minister ,Rajakannapan , 9,333 buses to operate in 27 districts from tomorrow: Additional buses for passenger arrivals: Minister Rajakannappan
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...