×

முதல் டோஸ் கோவாக்சின், பூஸ்டர் டோஸ் கோவிஷீல்டு குறித்து எய்ம்ஸ் தலைவர் கருத்து

டெல்லி: இரண்டு டோஸ்களுக்கு இரு வெவ்வேறு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா என்ற சந்தேகத்துக்கு டெல்லி எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா பதில் அளித்துள்ளார். இந்தியாவில், பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அத்துடன் தனியார் மருத்துவமனைகளில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசி போடப்படுகிறது. பெரும்பாலான மக்கள் அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போடப்படும் கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகளையே போட்டுக்கொள்கின்றனர். ஒருசில இடங்களில் முதல் டோஸ் கோவிஷீல்டும், அடுத்த டோஸ் கோவாக்சினும் போட்டுக் கொள்ளும் சம்பவங்கள் அறியாமையால் நடந்திருக்கின்றன.

ஆனால் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் தெரிந்தே இரண்டு டோஸ்களுக்கு வெவ்வேறு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதனை வேக்சின் காக்டெய்ல் என கூறுகின்றனர். இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை மாறாக எதிர்ப்பணுக்கள் அதிகளவில் உருவாகின்றன என மேலைநாட்டு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதனால் அங்கு ஃபைஸர், மாடர்னா தடுப்பூசி டோஸ்கள் மாறிமாறி செலுத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்தியாவிலும் கோவேக்சின், கோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கும் ஒவ்வொரு தடுப்பூசியைப் பயன்படுத்தினால் என்னவென்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், இதனால் பக்கவிளைவுகள் சற்று அதிகமாக இருப்பதாக சில ஆய்வுகளும், பக்க விளைவுகள் இருந்தாலும் கூட எதிர்ப்பணுக்களை சற்று அதிகமாக உருவாக்குவதாகவும் சில தரவுகள் கூறுகின்றன. ஆனால் இதை உறுதிப்படுத்த ஒன்றிரண்டு ஆய்வு முடிவுகள் நிறைய தரவுகள் வேண்டும். இன்னும் சில காலத்தில் இந்தியாவில் உள்நாட்டு தடுப்பூசிகளுடன் ஃபைஸர், மாடர்னா, ஸ்புட்னிக் V, சைடஸ் காடில்லா என நிறைய தடுப்பு மருந்துகள் கிடைக்கும். ஆகையால் அந்த நேரத்தில் எந்த இரண்டு மருந்துகளை முதல், இரண்டாவது டோஸ்களுக்கு கலந்து கொடுக்கலாம் என்பதை ஆய்வு செய்ய நிறைய வாய்ப்பிருக்கும். இப்போதைக்கு, கோவாக்சின், கோவிஷீல்டு மாறிமாறி கொடுப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. இருப்பினும் இதனை கொள்கை முடிவாக செயல்படுத்த நிறைய தரவுகள் தேவைப்படுகிறது. அரசாங்கமும் இதில் கவனம் செலுத்தி வருகிறது. இன்னும் ஒருசில மாதங்களில் இதுதொடர்பான முடிவை அரசு வெளியிடும் என்று ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.



Tags : AIMS , covishild, covaxin
× RELATED ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி