×

50 ரூபாயில் கொரோனா கிட்: 5 நிமிடங்களுக்குள் சோதனை முடிவு: டெல்லி ஐஐடி அறிமுகம்

டெல்லி: வெறும் 5 நிமிடங்களுக்குள் கோவிட் 19 சோதனை முடிவுகளை அறிந்துகொள்ளும் வகையில் 50 ரூபாயில் கொரோனா பரிசோதனை கருவியை ஐஐடி டெல்லி அறிமுகம் செய்துள்ளது. ஐசிஎம்ஆர் ஒப்புதல் பெற்ற இந்த கொரோனா பரிசோதனை கருவியை மத்தியக் கல்வித்துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசும்போது, நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை எளிதாக்கப்படுவதையும் பரவலாக்கப்படுவதையும் இந்தத் தொழில்நுட்பமும் கருவியும் உறுதி செய்யும் என்று நம்புகிறேன். ஐஐடி டெல்லியின் சொந்த வளங்களைப் பயன்படுத்தித்தான் இந்த பரிசோதனைக் கருவி முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் பெருமிதமும் கொள்வதாக கூறினார்.

இந்த கருவியில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்துக்கு ஐஐடி டெல்லி காப்புரிமை பெற்றுள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தை ஐஐடி டெல்லி பயோமெடிக்கல் பொறியியல் துறை பேராசிரியர் ஹர்பால் சிங் மற்றும் அவரின் குழுவினர் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

இதுகுறித்துப் பேராசிரியர் ஹர்பால் சிங் கூறும்போது, இந்தக் கருவி மூலம் மனித நாசி, தொண்டை, எச்சில் மாதிரிகளைக் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள இந்தக் கருவி ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்த கருவியை உருவாக்கிச் சந்தையில் விற்பனை செய்ய, நாடு முழுவதும் இரண்டு நிறுவனங்களுக்கு ஐஐடி டெல்லி உரிமம் வழங்கி உள்ளது.



Tags : Delhi IIT , corona test kit
× RELATED ரூ.1,5 கோடி மதிப்பு கொண்டது ரூ.1.75...