அயோத்தி நில மோசடி பற்றி சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து பாஜக தீர்மானம் நிறைவேற்றுமா?: ஒன்றிய அரசு மீது சிவசேனா பாய்ச்சல்..!!

மும்பை: ராமர் கோவில் கட்டுவதற்கு நிலம் வாங்கியதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளின் விசாரணைக்கு பரிந்துரைத்து பாரதிய ஜனதா கட்சி தீர்மானத்தை நிறைவேற்றுமா என்று சிவசேனா கேள்வி எழுப்பியிருக்கிறது. முறைகேடுகள் தொடர்பாக மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார், சிவசேனா அமைச்சர் அனில் பரப் ஆகியோரை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் விசாரணை செய்ய வேண்டும் என்றும் மாநில பாரதிய ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து மராட்டிய முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. இதுகுறித்து மும்பையில் பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களா? அல்லது பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் உறுப்பினர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அயோத்தி ராமர் கோவில் நில மோசடி வழக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உகந்தது தான் என்று குறிப்பிட்ட அவர், அதுகுறித்து சிபிஐ விசாரிக்க பாஜக தேசிய குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றுவார்களா? என்று வினவினார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தகூடாது என்று தெரிவித்துள்ள சஞ்சய் ராவத், அதுபோன்ற செயல்களை ஒன்றிய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கொரோனா காலகட்டத்தில் பெருந்தொற்றை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளுக்கு பதிலாக தவறான நேரத்தில் தவறான செயல்களை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருவதாகவும் ராவத் குற்றம்சாட்டியிருக்கிறார். உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறக்கட்டளை மீது சமீபத்தில் புகார் கூறப்பட்டது. ராமர் கோவிலுக்காக 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 18.5 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More