×

மயிலாடுதுறை அருகே எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி முயற்சி : கிராம மக்கள் போராட்டம்

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே அஞ்சாறு வார்த்தலை என்ற இடத்தில் கடந்த 2002ம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்தால் எண்ணெய் கிணறு அமைக்கப்பட்டது. இதற்காக ஒப்பந்த அடிப்படையில் நிலங்கள் பெறப்பட்டு இருந்தது. 2008ம் ஆண்டு அதே பகுதியில் மேலும் ஒரு எண்ணெய் கிணறு தோண்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதால் புதிய கிணறுகள் தோன்றுவதற்கும், புதிதாக எண்ணெய் வளம் கண்டுபிடிப்பதற்கும் தடை போடப்பட்டது.

இந்நிலையில் ஏற்கனவே உள்ள எண்ணெய் கிணறுகள் அருகில் மேலும் எண்ணெய் கிணறுகளை தோண்டுவதற்கு ஓஎன்ஜிசி நிர்வாகம் முடிவு எடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அஞ்சாறு வார்த்தலையில் புதிதாக தோண்டப்படும் இந்த கிணற்றில் ஷேல்கேஸ் எடுப்பதற்கு முடிவு எடுத்துள்ளதாகவும், அதை நீரியல் விரிசல் முறையை பயன்படுத்த உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதற்காக புதிதாக எண்ணெய் கிணறு தோண்டுவதற்கான அனைத்து உபகரணங்களும் வந்து இறங்கியது. வயல்களில் தடுப்புச்சுவர் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை எண்ணெய் கிணறு உள்ள இடத்தில் லாரிகள் மூலம் மேலும் பொருட்கள் வந்து இறங்கின. தகவலறிந்த அஞ்சாறு வார்த்தலை பகுதி மக்கள், எண்ணெய் கிணறு முன் திரண்டதோடு, புதிய கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிறிது நேரம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், இப்பகுதியில் 40 அடியில் கிடைத்த தண்ணீர் 300 அடியை தாண்டி விட்டது.பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் ஓஎன்ஜிசி கொல்லைப்புறமாக வந்து வேலை செய்வது கண்டிக்கத்தக்கது. கிணறு அமைக்கும் பணியை நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டம் நடைபெறும் என்றனர்.



Tags : ONGC ,Mayiladu , மயிலாடுதுறை
× RELATED 7 நாட்களாக எங்கே பதுங்கி இருக்கிறது?:...