×

உலகத்தை உலுக்கிய கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு : போலீஸ் அதிகாரி டெரிக் சாவ்வினுக்கு 22. 5 ஆண்டுகள் சிறை தண்டனை!!

வாஷிங்டன் :அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி  டெரிக் சாவ்வினுக்கு 22. 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மின்னியாபோலிஸ் நகரில் கடந்தாண்டு மே 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின இளைஞரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவ்வின் முழங்காலை வைத்து அழுத்தியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பிளாய்ட் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

ஜார்ஜ் பிளாய்ட் உயிருக்குப் போராடிய காட்சி அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கருப்பின மக்கள் மீதான நிறவெறியை கண்டித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவ்வின் உள்பட 4 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. டெரிக் சாவ்வின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஓர் ஆண்டாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  முன்னாள் காவல் அதிகாரி  டெரிக் சாவ்வினுக்கு 22. 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது நியாயமான ஒரு தீர்ப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.ஆனால் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக ஜார்ஜ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். டெரிக் சாவ்வினுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : George Floyd ,Derrick Chavez , ஜார்ஜ் பிளாய்ட் கொலை
× RELATED அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் கொலை.....