×

கோபா கோப்பை கால்பந்து உருகுவே, பராகுவே காலிறுதிக்கு தகுதி

குயாபா: கோபா கோப்பை கால்பந்து தொடரின்  ஏ பிரிவில் உள்ள  உருகுவே, பராகுவே அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையில்  கோபா கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. பிரசேிலில் நடைபெறும் இந்த தொடரில் நேற்று  ஏ பிரிவு ஆட்டங்கள் நடந்தன.  குயாபா நகரில் நடந்த  ஆட்டத்தில் பொலிவியா - உருகுவே அணிகள் மோதின. வெற்றி,  காலிறுதி வாய்ப்பை  உறுதிப்படுத்தும் என்பதால் இரு அணிகளும் மல்லுக்கட்டின. உருகுவே  பல முறை முயற்சித்தும் கோலடிக்க முடியவில்லை.  அப்படி ஒரு முயற்சியை தடுத்த  பொலிவியா வீரர் ஜெய்ரோ மீது பட்ட பந்து சுய கோலானது. அதனால் முதல் பாதியில் உருகுவே முன்னிலை பெற்றது. தொடர்ந்து79வது நிமிடத்தில் அந்த அணியின் எடின்சன் கவானி  ஒரு கோல் அடித்து முன்னிலையை வலுவாக்கினார்.

அதன் பிறகு 2 அணிகளும் கோலடிக்காததால் உருகுவே 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதேபோல் மற்றொரு ஏ பிரிவு ஆட்டத்தில் சிலி - பராகுவே அணிகள் மோதின. சிலி அணி சிறப்பாக விளையாடி பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் கோல் அடிக்க முடியவில்லை. அதே சமயம், கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பராகுவே  2 கோல்களை போட்டது.  அந்த அணியின் சமுடியோ 33வது நிமிடத்திலும்,  அல்மிரோன்  58வது நிமிடத்திலும் பெனால்டி வாய்ப்பில் கோலடித்தனர். இப்போட்டியில்  பராகுவே 2-0 என்ற கோல் கணக்கில்  வென்றது.

ஏ பிரிவில் பொலிவியா வெளியேறுவது உறுதியாகிவிட்ட நிலையில் அர்ஜென்டினா, பராகுவே, சிலி, உருகுவே ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. ஜூன் 28ம் தேதி  உருகுவே - பராகுவே, பொலிவியா-அர்ஜென்டீனா  அணிகளிடையே நடைபெற உள்ள லீக் ஆட்டங்களுக்கு பிறகு ஏ பிரிவில் யாருக்கு எந்த இடம் என்பது உறுதியாகும்.  சிலி 4 ஆட்டங்களிலும் ஆடி முடித்து விட்டது.

Tags : Copa del Rey ,Uruguay ,Paraguay , Copa del Rey football, Uruguay, Paraguay, quarterfinals
× RELATED கைலாசா நாட்டுடன் ஒப்பந்தம் பராகுவே அதிகாரி டிஸ்மிஸ்