மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் குண்டாசில் கைது

சென்னை: பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னை கே.ேக.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வரும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளின் ஆன்லைன் வகுப்பின் போது அரை நிர்வாண நிலையில் பாடம் எடுப்பதாகவும், வாட்ஸ் அப் மூலம் இரவு நேரங்களில் மாணவிகளுக்கு தனியாக ஆபாச மெசேஜ் மற்றும் ஆபாச புகைப்படங்கள் அனுப்பி தொடர் பாலியல் தொந்தரவு செய்து வருவதாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் புகாரை தொடர்ந்து, ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார்.

ஆசிரியர் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்க காவல் துறை சார்பில் வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டது. அந்த எண்ணிற்கு முன்னாள் மற்றும் தற்போது படித்து வரும் மாணவிகள் என தமிழகம் முழுவதிலும் இருந்து 30க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் படி போலீசார் மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.  இந்நிலையில் சிறையில் உள்ள ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் பரிந்துரை செய்தார்.

ஆய்வாளரின் பரிந்துரையை ஏற்ற போலீஸ் கமிஷனர், ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.  அதன்படி நேற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories: