பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் நிர்ணயிப்பது எப்படி?.. சிபிஎஸ்இ,ஐசிஎஸ்இ 10ம் வகுப்பு மதிப்பெண் திரட்டல்; பள்ளி கல்வித்துறை தீவிரம்

சென்னை:தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி மதிப்பெண்களை நிர்ணயம் செய்ய சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் இதர மாநில பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு முடித்த மாணவர்களின் மதிப்பெண்களை திரட்ட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.  தமிழக அரசுத் தேர்வுகள் துறையின் இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் பிளஸ் 2 வகுப்பில் கடந்த 2020-2021ம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்காக அவர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண்களை ஜூன் 25ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் சரிபார்த்து தேர்வுத் துறைக்கு அனுப்ப வேண்டும். மாணவர்களின் மதிப்பெண்களை சரிபார்க்கும்போது பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கு மாணவர்கள் கொடுத்த மதிப்பெண் சான்றுகளின் பதிவு எண்களையும் சரிபார்க்க வேண்டும்.

மாணவர்களின் பெயர்ப் பட்டியலை 25ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் தேர்வுத்துறை இணை இயக்குநர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்நிலையில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்ட த்தின் கீழ் வேறு மாநிலங்களில் 10ம் வகுப்பை முடித்தவர்கள் தேர்ச்சி பெறாத நிலையில் மீண்டும் தேர்வு எழுதியிருந்து பிளஸ் 1ல் சேர்ந்திருக்க வாய்ப்புள்ளது. தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் தேர்வுத்துறை நடத்தும் தேர்வைத் தவிர, பிற பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் மதிப்பெண்களின் விவரங்கள் அரசுத் தேர்வுத்துறையில் இருக்காது. அதனால் 10ம் வகுப்பு மதிப்பெண்களை சரியாக எந்த குழப்பமும் இல்லாமல் சரியாக பதிவு செய்ய வேண்டும்.

பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி உள்ளதால் அவர்களின் மதிப்பெண்கள் அரசுத் தேர்வுத்துறையில் இருக்கும். எனவே சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண்களையும் தேர்வுத்துறை கேட்டுள்ளது. இந்த மதிப்பெண்களையும் பயன்படுத்தி பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதற்கு அரசு அனுமதி அளித்தால் விரைவில் அரசாணையும் வெளிவரும். இந்த அரசாணை வந்த பிறகு 15 நாட்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Related Stories: