நடிகையை ஏமாற்றிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக நடிகையை ஏமாற்றிய வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகார் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மணிகண்டன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 16ம் தேதி தள்ளுபடி செய்தது. இந்தநிலையில்  பெங்களூருவில்  தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறையினர் ஜூன் 20ம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

இவ் வழக்கில் மீண்டும் ஜாமீன் கோரி மணிகண்டன் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.   இந்த மனு நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், இன்னும் விசாரணை முழுமையாக முடிவடையவில்லை. மேலும் ஆவணங்களை பெற மணிகண்டனை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்று வாதிட்டார். மணிகண்டன் தரப்பில் ஆஜரான வக்கீல்,  குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. அனைத்தும் பணம் பறிக்கும் நோக்கில் உள்ளது. மனுதாரர் ஒரு மருத்துவர் மற்றும் முன்னாள் அமைச்சர், இந்த வழக்கில் ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளார். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி செல்வக்குமார், இந்த வழக்கில் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories:

>