×

செட்டாப் பாக்ஸ் விற்பனை செய்த 2 நிறுவனங்களுக்கு அள்ளி கொடுத்ததால் தமிழ்நாடு அரசு ேகபிள் டிவி நிறுவனத்துக்கு ரூ.37.43 கோடி இழப்பு: இந்திய தணிக்கைத்துறை அறிக்கையில் அம்பலம்

சென்னை: செட்டாப் பாக்ஸ் விற்பனை செய்த 2 நிறுவனங்களுக்கு அள்ளி கொடுத்ததால் தமிழ்நாடு அரசு ேகபிள் டிவி நிறுவனத்துக்கு ரூ.37.43 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது இந்திய தணிக்கைத் துறை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து, இந்திய தணிக்கைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், அதன் சந்தாதாரர்களுக்கு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் கட்டண சேனல்கள், இலவச சேனல்களை வழங்கி வருகிறது. அந்த நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2017ல் பாலாஜி மிஷின் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட், மந்த்ரா இன்டஸ்டீரிஸ் லிமிடெட் ஆகிய 2 விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.1,588 மற்றும் ரூ.2,100 விலைக்கு சுமார் 36 லட்சம் சாதாரண (SD) செட்டாப் பாக்ஸ், 40 ஆயிரம் ஹெச்டி(HD) செட்டாப் பாக்ஸ்சும் வாங்க கொள்முதல் ஆணை வழங்கியது.  இதில், 10 விழுக்காடு சுங்கவரியாக அதாவது ரூ.116.13 சாதாரண(SD) செட்டாப் பாக்ஸ்க்கும் மற்றும் ரூ.155.88 ஹெச்டி(HD) செட்டாப் பாக்ஸ்க்கும் உள்ளடக்கியது. செட்டாப் பாக்ஸ் மீதான சுங்க வரி 2017 டிசம்பர் 14ம் தேதி 10 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக உயர்த்தப்பட்ட நிலையில், விநியோக நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சுங்க வரி அளவை ரூ.232.63 மற்றும் ரூ.311.76 வீதம் முறையே செட்டாப் பாக்ஸ்க்கு உயர்த்தி வழங்க ஒப்புக்கொண்டது.

 இதன் விளைவாக, சாதாரண (SD) செட்டாப் பாக்ஸ் விலை ரூ.1725.26 ஆகவும், ஹெச்டி செட்டாப் பாக்ஸ் விலை ரூ.2,283 ஆகவும் அதிகரித்தது. கொள்முதல் ஆணையின்படி வழங்கப்பட்ட பொருட்களின் மதிப்பீட்டு அளவில் 10 விழுக்காடு பணம் வழங்கப்பட்ட தேதியில் இருந்து 7 நாட்களுக்குள் கொடுக்கப்படும். மீதமுள்ள 90 விழுக்காடு பணம் பொருட்கள் வழங்கப்பட்ட 30 நாட்களுக்கு பின் கொடுக்கப்படும். மேலும், கொள்முதல் ஆணையின்படி அரசாங்கத்திற்கு வரிகளை செலுத்தியதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்ட பின்பே நிறுவனம் அந்த கட்டணத்தை வழங்க வேண்டும். ஆனால், விற்பனையாளர்கள் 36 லட்சம் சாதாரண செட்டாப் பாக்ஸ், 40 ஆயிரம் ஹெச்.டி செட்டாப் பாக்ஸ்களை 2018க்குள் வழங்கி விட்டனர்.

 விற்பனையாளர்களின் விநியோக விலைப்பட்டியலில் இறக்குமதிக்கான சுங்க வரி செலுத்தப்பட்டதின் உள்விவரம் காட்டப்படவில்லை. மேலும், அரசுக்கு சுங்க வரி செலுத்தியதற்கான ஆதாரங்களும் இணைக்கப்படவில்லை. எனினும் விலைப்பட்டியல் மதிப்பில் 10 விழுக்காடு தொகை ஆரம்ப கட்டணம் மற்றும்  எஞ்சிய 90 விழுக்காடு தொகை ஆகியவற்றை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் விற்பனையாளர்களுக்கு வழங்கியது. விற்பனையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட இறக்குமதிக்கான சுங்கவரியினை சரிபார்ப்பதற்காக எவரிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதோ அதன் விவரங்கள் நிறுவனத்திடம் தணிக்கையின் போது கோரப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் அந்த விவரங்களை தணிக்கைக்கு தரவில்லை.

 இந்த சூழ்நிலையில், நிறுவனத்திடம் தகுந்த பதிவேடுகள் எதுவும் இல்லாத காரணத்தால் டைரக்டர் ஜெனரல் ஆடிட் (மத்திய வருவாய்) அலுவலர் சென்னை சுங்க வரி தணிக்கைக்காக பெற்ற டம்ப் டேட்டாவினை ஆய்வு செய்தது. அதில், ஒரு விற்பனையாளர், சீனாவில் இருந்து சென்னை துறைமுகம் வழியாக ஒரு செட்டாப் பாக்ஸ்க்கு சராசரி அடிப்படை விலையை ரூ.570 என்ற மதிப்பில் சுங்க வரியை கட்டி இறக்குமதி செய்தது தெரிய வந்தது. இதனால் ஒப்பந்தம் செய்த விலை ரூ.1,163 ஆக குறைந்தது. ஆகையால் நிறுவனம் விற்பனையாளர்களுக்கு திருப்பி செலுத்திய சுங்கவரியானது விற்பனையாளர்கள் சுங்க வரித்துறைக்கு செலுத்தியதை விட அதிகப்படியாக இருந்தது. விற்பனையாளர்கள் கோரியதை நம்பி அரசுக்கு சுங்கவரி செலுத்திய ஆதாரத்தை நிர்பந்திக்காமல் கேட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிட்டத் தொகை விற்பனையாளர்களுக்கு நிறுவனம் கொடுத்து விட்டது என்ற விவரம் தணிக்கையில் கண்டறியப்பட்டது.

 இவ்வாறாக, மந்த்ரா இன்ட்ஸ்டிரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு முறையற்ற வகையில் செலுத்திய அதிகப்படியான சுங்கவரி சாதாரண செட்டாப் பாக்சுக்கு ரூ.14.16 கோடி, ஹெச்.டி செட்டாப் பாக்சுக்கு ரூ.58 லட்சம் என மொத்தம் ரூ.14.74 கோடி என கண்டறியப்பட்டது.  மற்றொரு விற்பனையாளர் பாலாஜி மிஷின் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும் இவ்வண்ணமே சுங்கவரி செலுத்திய ஆதாரத்தை நிர்பந்திக்காமல் சுங்கவரிக்கான தொகை வழங்கப்பட்டது. எனினும் தணிக்கையில் எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்ற விவரத்தை அறிய முடியவில்லை. அதனால், அதிகப்படியாக கொடுத்த சுங்க வரி தொகையை கணக்கீடு செய்ய இயலவில்லை.

 கொள்முதல் ஆணையில் நிர்ணயிக்கப்பட்ட காலவரையறைக்குள் பொருட்களை வழங்காவிடில், வழங்கப்படாத பொருட்கள் மதிப்பின் மீது ஒரு வாரத்திற்கு 0.5 விழுக்காடு ஆகவும், அதிகபட்சமாக 5 விழுக்காடு ஆகவும் அபராத தொகை விற்பனையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டும். விற்பனையாளர்கள் 50 வார காலம் வரை காலதாமதாக செட்டாப் பாக்ஸை வழங்கினர் என்பது தணிக்கையில் கண்டறியப்பட்டது.

 இவ்வாறு காலதாமதாக வழங்கப்பட்டதற்கு பாலாஜி மிஷின் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.9.22 கோடி, மந்த்ரா இன்ட்ஸ்டிரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.13.47 கோடி என அபராத தொகை ரூ.22.16 கோடி கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் அதற்குரிய எவ்வித அபராத தொகையும் விதிக்கப்படவில்லை. இது இரண்டு விற்பனையாளர்களுக்கும் முறையற்ற சலுகையாக அமைந்தது. விற்பனையாளர்கள் அரசுக்கு உண்மையாக செலுத்திய சுங்கவரி ஆதாரத்தை சமர்ப்பிக்க நிர்பந்தம் செய்து அவர்கள் செலுத்திய சுங்கவரியை மட்டும் அவர்களுக்கு வழங்காமல், கொள்முதல் ஆணையின்படி வழங்கியது மற்றும் காலதாமதமாக வழங்கிய செட்டாப் பாக்ஸ் அபராத தொகை விதிக்கப்படாமல் இருந்தும் ரூ.37.43 கோடி அளவிற்கு விற்பனையாளர்களுக்கு சலுகை வழங்கி இருப்பது உறுதியாகியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், ஆகஸ்ட் 2017ல் 2 விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.1,588 மற்றும் ரூ.2,100 விலைக்கு சுமார் 36 லட்சம் சாதாரண செட்டாப் பாக்ஸ், 40,000 ஹெச்டி செட்டாப் பாக்ஸ்சும் வாங்க கொள்முதல் ஆணை வழங்கியது.
* செட்டாப்பாக்ஸ் மீதான சுங்க வரி 2017 டிசம்பர் 14ம் தேதி 20 விழுக்காடாக உயர்த்தப்பட்ட நிலையில், விநியோக நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சுங்க வரி அளவை முறையே ரூ.232.63 மற்றும் ரூ.311.76 வீதம் உயர்த்தி வழங்க ஒப்புக்கொண்டது.
* இதனால் சாதாரண செட்டாப் பாக்ஸ் விலை ரூ.1725.26 ஆகவும், ஹெச்டி செட்டாப் பாக்ஸ் விலை ரூ.2,283 ஆகவும் அதிகரித்தது.
* அரசுக்கு சுங்க வரி செலுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லாதபோதும், விலைப்பட்டியல் மதிப்பில் 10 விழுக்காடு தொகை ஆரம்ப கட்டணம் மற்றும் எஞ்சிய 90 விழுக்காடு தொகை ஆகியவற்றை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் விற்பனையாளர்களுக்கு வழங்கியது.
* நிறுவனம் விற்பனையாளர்களுக்கு திருப்பி செலுத்திய சுங்கவரியானது விற்பனையாளர்கள் சுங்க வரித்துறைக்கு செலுத்தியதை விட அதிகமாக இருந்தது. விற்பனையாளர்கள் கோரியதை நம்பி அரசுக்கு சுங்கவரி செலுத்திய ஆதாரத்தை நிர்பந்திக்காமல் கேட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிட்டத் தொகை விற்பனையாளர்களுக்கு நிறுவனம் கொடுத்து விட்டது.

விற்பனையாளர்களின் விநியோக விலைப்பட்டியலில் இறக்குமதி க்கான சுங்க வரி செலுத்தப்பட்டதின் உள்விவரம்
காட்டப்படவில்லை”

Tags : Tamil Nadu Government ,Telekable TV ,Chetapbox ,Ambalam , Because the set-top box was donated to 2 companies that sold it Tamil Nadu state cable TV loses Rs 37.43 crore: Indian audit report exposes
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...