×

வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த தயார் : மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவிப்பு

புதுடெல்லி:வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் இருந்து நியாயமான கோரிக்கைகள் வரும் பட்சத்தில், அவர்களிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகின்றனர். அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையையும் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பாரதிய கிசான் சங்கம் தலைவர் நரேஷ் டிகாயத் அழைப்பின் பெயரில் மேற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தின் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் காசிப்பூர் எல்லையின் போராட்ட களத்திற்கு தற்போது டிராக்டர்களில் வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து போராட்டம் மேலும் தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக கூடுதல் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தீடீர் திருப்பமாக மத்திய அரசுடன் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஒருவேளை அதற்கு உடன்படவில்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம். இருப்பினும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் ராகேஷ் தீக்காய கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளரை சந்தித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஜம்மு காஷ்மீர் எதிர்கட்சிகளின் கூட்டம் உட்பட எழுப்பப்பட்டது. இதில் முக்கியமாக வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகள் குறித்து அவரிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதில், மத்திய அரசு இந்த விவகாரத்தில் பத்திலிருந்து பதினோரு முறை அதாவது 50 மணி நேரத்திற்கும் மேலாக விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் எந்தவித சுமூகமான முடிவும் எட்டப்பட்டவில்லை. அதற்கான காரணம் என்ன என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் விவசாயிகளின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அவர்கள் தான் எங்களோடு ஒத்துழைக்கவில்லை. இப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக தான் இருக்கிறோம். விவசாயிகளிடமிருந்து நியாயமான கோரிக்கைகள் வரும் பட்சத்தில் நிச்சயமாக அதுகுறித்து கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Union Minister ,Narendra Singh Tomar , வேளாண்
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...