பீகார் மாநில ‘எஸ்டெட்’ தேர்வின் மார்க் ‘சீட்’டில் நடிகையின் போட்டோ: எதிர்கட்சி தலைவர் காட்டம்

பாட்னா: பீகாரில் நடத்தப்பட்ட ‘எஸ்டெட்’ தேர்வு மதிப்பெண் சான்றில் நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இருந்ததால், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் இளநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (எஸ்டெட்’) முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், ரிஷி குமார் என்ற தேர்வரின் மதிப்பெண் சான்றிதழில் தேர்வரின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் மலையாள திரைப்பட நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. ஆனால், தேர்வர் பெற்ற மதிப்பெண் மற்றும் இதர விபரங்கள் சரியாக இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இந்த தேர்வு முடிவு சான்று, சமூக ஊடகங்களில் வைரலானது.

இதுகுறித்து, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பீகார் அரசால் நடத்தப்படும் ஜூனியர் இன்ஜினியர் தேர்வில் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்த பிறகு, இப்போது மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இளநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். முதல்வர் நிதிஷ்குமார், இவ்வாறு இளைஞர்களுக்கான தேர்வில் பல்வேறு மோசடிகளை செய்வதன் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை அழித்து வருகிறார்’ என்று பதிவிட்டுள்ளார். தேர்வு முடிவுக்கான சான்றிதழில் இதுபோன்ற அலட்சியங்களுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், ரிஷிகுமாரின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகையின் படத்தை பதிவேற்றிய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

Related Stories:

>