இமாச்சல முதலமைச்சர் முன்னிலையில் அதிகாரிகள் மோதிய விவகாரம்!: முதல்வரின் பாதுகாவலர், மாவட்ட எஸ்.பி. அதிரடி சஸ்பெண்ட்..!!

குல்லு: இமாச்சலப்பிரதேச முதலமைச்சர் முன்னிலையிலேயே காவல் அதிகாரிகள் தாக்கி கொண்ட சம்பவத்தில் மாவட்ட கண்காணிப்பாளரும், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியும் தற்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இமாச்சலப்பிரதேசம் வருகை தந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை வரவேற்பதற்காக முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் குல்லு மாவட்டத்தில் உள்ள பூந்தர் விமான நிலையம் சென்றார். அப்போது 4 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விமான நிலையத்திற்கு வெளியே கூடியிருந்தனர். 

அவர்களை அனுமதித்தது தொடர்பாக முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி பல்வந் சிங்கிற்கும், குல்லு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுரவ் சிங்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாகனத்திற்குள் முதலமைச்சர் இருப்பதை கண்டுகொள்ளாமல் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். முதலமைச்சருக்கு முன்பாகவே உயர் காவல் அதிகாரிகள் மோதிக்கொண்டது இமாச்சலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதை அடுத்து துறை ரீதியிலான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட இமாச்சலப்பிரதேச காவல்துறை தலைவர் சஞ்சய், குல்லு மாவட்ட எஸ்.பி. கவுரவ் சிங் மற்றும் முதல்வரின் பாதுகாப்புப்படை அதிகாரி பல்வந் சிங் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் துணை கண்காணிப்பாளர் பிரஜேஷ் என்பவரும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

More