×

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி கிடைக்குமா?

*வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

தென்காசி : சுற்றுலாத் தலமான குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் 50 முதல் 70 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவர். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலங்களாகும். நவம்பர், டிசம்பர், ஜனவரி ஐயப்ப சீசன் காலங்கள். குற்றால சீசன் மாதங்களில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் இப்பகுதி வர்த்தகர்கள், விடுதி உரிமையாளர்கள் ஒரு வருட பராமரிப்பு செலவுகளை ஈடு செய்ய வேண்டும். சீசன் சமயங்களில் ஏதேனும் பிரச்னை ஏற்படும் போது வருவாய் பாதிக்கப்படுகிறது.

கடந்தாண்டு சீசன் காலத்தில் உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்றால் முற்றிலுமாக சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. தற்போது 2வது வருடமாக ஜூன் மாதம் ஊரடங்கில் கழிந்து விட்டது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலாவது தடை விலக்கப்பட்டு அனுமதி கிடைக்குமா என சுற்றுலாப் பயணிகள், குற்றாலம் பகுதி வர்த்தகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தும் தடையால் குளிக்க முடியவில்லை. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. குற்றாலநாதர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தற்காலிக கடைகள் இன்னமும் ஏலம் விடப்படவில்லை. கடந்தாண்டு மட்டும் கோவில் நிர்வாகத்திற்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் ஏல நடவடிக்கைகள் துவங்கும். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த ஆண்டும் ஜூன் மாதமாகியும் ஏலம் விடப்படவில்லை. ஜூலையில் ஏலம் விடப்படலாம் என்ற தகவல் அறநிலையத்துறை வட்டாரங்களில் பரவி வருகிறது.

கொரோனா தொற்று குறைந்து வருவதால் அரசு ஒவ்வொரு வாரமும் தளர்வுகள் அறிவித்து வரும் நிலையில் விரைவில் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு சிலர் கடைகளை தயார் படுத்தி வருகின்றனர். இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், குற்றாலம் சீசனை மட்டுமே நம்பியுள்ளது. மற்ற பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் திறக்கப்படும் நிலையில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்காததாலும், குளிக்க தடை நீடிப்பதாலும் அத்தியாவசிய கடைகளிலும் வியாபாரம் இல்லை.

கடை வாடகை, பராமரிப்பு, சம்பளம் உள்ளிட்டவற்றை சமாளிக்க இயலவில்லை. இங்கு மக்கள் தொகை சில நூறு எண்ணிக்கையில்தான் உள்ளது. கோவில் திறந்தால் பக்தர்கள் யாராவது வருவார்கள். அதுவும் இல்லாததால் குற்றாலத்தில் வர்த்தகம் எதுவுமின்றி வெறிச்சோடியுள்ளது. வருகிற 2 மாதங்களில் அனுமதி கிடைக்கவில்லை எனில் பலர் கடனில் மூழ்குவதுடன் கடைகளையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.


Tags : Kurla Falls , Tenkasi, Tourist,Coutrallam
× RELATED மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை...