×

திண்டுக்கலில் வடிவேலுவின் கிணத்தை காணோம் காமெடியை போல தோண்டாத கிணற்றுக்கு ரூ.4.12 லட்சம் மோசடி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி ராஜகுளம் பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை தொட்டிக்கு கான்க்ரீட் படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்படாமலேயே குடிநீர் வாரிய பதிவேட்டில் கிணறு அமைக்கப்பட்டுவிட்டதாக கணக்கு காட்டி ரூ.4.12 லட்சம் மோசடி செய்து இருப்பது சிஏஜி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. தலைமைக் கணக்காயர் நேரடியாக அங்கு சென்று ஆய்வு செய்த போது, அந்த மோசடி அம்பலம் ஆகி உள்ளது. அது மட்டுமின்றி கான்க்ரீட் படிக்கட்டுகள் அமைப்பதற்கு பதிலாக மேல்நிலை தொட்டிக்கு இரும்பு ஏணி அமைக்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கான்க்ரீட் படிக்கட்டுக்கும் இரும்பு ஏணிக்கான செலவு வேறுபாடு மட்டுமே ரூ.1.23 லட்சம் என சிஏஜி தெரிவித்துள்ளது. நத்தத்தில் நடந்த இந்த மோசடி நடிகர் வடிவேலுவின் கிணறை காணோம் காணொளி காமெடியை நிஜமாக்கி உள்ளது. தலைமை கணக்காயர் சுட்டிக் காட்டியதால் அப்போதைய நத்தம் பேரூராட்சி செயலர் தவறி ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. மோசடி செய்த ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.2.36 லட்சம் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகவும் எஞ்சிய தொகையை வசூலிப்பதற்கு முன்பே அந்த ஒப்பந்ததாரர் காலமாகிவிட்டதாகவும் சிஏஜி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.இந்த மோசடிக்கு துணைபோன பேரூராட்சி அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு சிஏஜி அறிக்கையை சுட்டிக் காட்டி முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்த நூதன மோசடியை பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Tags : Dindigul , கிணறு
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...