×

பொன்னை அருகே ஏரி உடைப்பை சீரமைக்காததால் வீணாக வெளியேறிய மழைநீரில் மூழ்கிய வேர்க்கடலை செடிகள்-நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

பொன்னை :  பொன்னை அருகே ஏரி உடைப்பை சீரமைக்காததால் வீணாக வெளியேறிய மழை நீரில் வேர்க்கடலை செடிகள் மூழ்கியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த மாதாண்டகுப்பம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் இந்த ஏரி உடைந்து அதிலிருந்து தண்ணீர் வெளியேறி வீணானது. இதனால் இப்பகுதி விவசாயம் செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால், தற்போது வரை ஏரி உடைப்பை அதிகாரிகள் சரி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஏரிநீர் வீணாக விவசாய நிலங்களில் பாய்ந்து வீணானது. இதனால் இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஏரி உடைப்பை அடைக்காமல் காலம் தாழ்த்தினால் இனிவரும் காலங்களில் ஏரி நீர் வீணாகி இப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரி உடைப்பு அடைத்து இனி வரும் மழை காலங்களில் ஏரி தண்ணீரை வீணாகாமல் சேமித்து விவசாயிகள் பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Ponna , Ponnai: Peanut plants have been submerged in rain water which was wasted due to non-repair of the lake break near Ponnai.
× RELATED பொன்னையாற்றில் பரபரப்பு...