×

கண்ணமங்கலம் அருகே படவேட்டில் 69.90 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது 700 ஆண்டுகள் பழமையான ஏரியின் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு

* தனிநபர்கள் நிலங்களாக மாறியது
* தண்ணீரின்றி புதர்மண்டிய ஏரி

கண்ணமங்கலம் : கண்ணமங்கலம் அருகே படவேட்டில் 69.90 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதும், 700 ஆண்டுகள் பழமையான ஏரியின் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, தனிநபர்களின் நிலங்களாக மாறியும், புதர்மண்டியும் காட்சியளிக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில் அமைந்துள்ளது தாமரை ஏரி. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி  சுமார் 69.90 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாகும்.  படவேட்டை தலைநகரமாக கொண்டு கி.பி. 13ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சம்புவராய மன்னர்கள் காலத்தில் இந்த ஏரி வெட்டப்பட்டுள்ளது.

படவேட்டிற்கு மேற்கில் உள்ள தொட்டிப்பாறை கால்வாயிலிருந்தும், கமண்டல நாகநதியிலிருந்தும் இந்த ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அத்துடன், மழைக்காலங்களில் மலைகளிலிருந்து ஊற்றெடுத்து வரும் நீரும் இந்த ஏரியை வந்தடைந்தது. ஏரி தன் முழுகொள்ளவை அடைந்ததும் வேளாண் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டது.
அதற்காக ஏரியின் தென்கரையில் மதகு அமைக்கப்பட்டு இம்மதகு வழியாக விவசாயத்திற்கு நீர் வெளியேற்றப்பட்டது. இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றன. நீர் நிரம்பும் காலங்களில் இந்த ஏரி தாமரைப் பூக்களால் சூழ்ந்து தாமரைக் காடு போல காட்சி தருகிறது. எனவேதான் இதற்கு தாமரை ஏரி எனப் பெயரிட்டுள்ளனர்.  இப்படி பலஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இந்த ஏரியின் நீர்வரத்துக்கால்வாய் தனிநபர்களின் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது.

இதனால் இந்த ஏரியை நம்பி விவசாயம் செய்து வந்த நிலையில் தற்போது, போதிய நீராதாரம் இன்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே 700 ஆண்டுகள் பழமையான ஏரியின் நீர்வரத்துக்கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் அமுல்ராஜ் கூறியதாவது: கடந்த 700 ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் இருக்கும் போதெல்லாம் ஏரி முழுவதும் தாமரை மலர்களால் நிறைந்திருப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஏரி குளங்களில் தாமரை இருந்தால் அதன் வேர்கள் தரை முழுவதும் பரவி நீரை பாதுகாக்கும்.

இதை அறிந்த நம் முன்னோர்கள் ஏரி குளங்களில் தாமரைகளை வளர்த்தனர். இந்நிலையில் ஏரிக்கு நீர் வரும் கால்வாய்களை தனிநபர்கள் ஆக்கிரமித்து நிலங்களாக மாற்றியுள்ளனர். அத்துடன் ஏரியின் மதகுகளும் பயனற்று புதர் மண்டிக்கிடக்கின்றன. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கால்வாய்கள், ஏரி நிலங்கள் ஆகியவற்றை மீட்டு, மதகுகளை சரி செய்ய வேண்டும். அதோடு, ஏரி கால்வாய்களை தூர்வாரி, படகு சவாரி செய்யும் சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். பறவைகள் தங்க ஏதுவாக மண்திட்டுக்களை அமைத்து, அதன்மேல் குறுங்காடுகள் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

நீரின் அளவு கற்கள்

ஏரியில் உள்ள மதகின் அருகே சுமார் 15 அடி உயரத்தில் 2 கருங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏரியில் உள்ள நீரின் அளவை கணக்கிட்டுள்ளனர். 700 ஆண்டுகளாகியும் சிறிதும் சிதிலமடையாமல் கம்பீரமாக அந்த நீரின் அளவு கற்கள் கம்பீரமாக கட்சியளிக்கிறது. ஆனால் ஏரியில் தண்ணீரின்றி வறண்டு கிடப்பது தான் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Padavettu ,Kannamangalam , Kannamangalam: The canals of the lake are 700 years old and cover an area of 69.90 hectares at Padavettu near Kannamangalam
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...