×

தேனி ரயில் நிலையத்தில் இரும்பு நடைமேம்பால பணி நிறைவு

தேனி : தேனி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க உதவும் இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. தேனி மாவட்டம், போடியில் இருந்து மதுரைக்கு மீட்டர் கேஜ் ரயில் சேவை இருந்து வந்தது. இதை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக 2010, டிச. 31ம் தேதி ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கான பணி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

 மதுரையில் இருந்து போடி வரை ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி முற்றிலுமாக முடிவடைந்துள்ளது. மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வரை ரயில் தண்டவாளங்கள், பாலங்கள், ரயில்வே நிலையங்கள், ரயில்வே கிராசிங்குகள் அமைக்கும் பணி முற்றிலும் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து, மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை முதல்கட்டமாகவும், மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வரை 2வது கட்டமாகவும் பயணிகள் பெட்டியுடன் கூடிய சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டது.

இதனையடுத்து ஆண்டிபட்டியில் இருந்து தேனி வழியாக போடி வரை ரயில்வே நிலையங்கள், கிராசிங்குகள், ரயில்வே கேட்கள் அமைக்கும் பணி நடக்க வேண்டியுள்ளது. இப்பணிகள் முடிவடைந்து தேனி வரை ரயில் சோதனை ஓட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வரை தேனி வரையிலான ரயில்வே கிராசிங்குகளில் ரயில்வே கேட் அமைக்கும் பணியோ, தேனியில் ரயில்வே நிலையம் அமைக்கும் பணியோ முழுமை பெறாமல் அரைகுறையாக உள்ளது.

ஜூன் மாதத்திற்குள் தேனி வரை சோதனை ரயில் ஓட்டம் நடத்தி, பின்னர் ஆகஸ்ட் மாதத்திற்குள் போடி வரை சோதனை ஓட்டம் முடித்து ரயில் சேவை துவங்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நாள்தோறும் மிகக் குறைவான எண்ணிக்கையில் பணியாளர்களைக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் போடி வரையிலான பணிகள் முடிய இன்னமும் ஓராண்டு காலம் வரை ஆகும் நிலை உள்ளது. இந்நிலையில், தேனி ரயில்வே நிலையத்தில் பிளாட்பாரத்தில் மேற்கூரை அமைக்கும் பணி மற்றும் தண்டவாளம் பகுதியை கடந்து செல்வதற்கான இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. தேனி ரயில் நிலையத்தில் கட்டுமானப்பணிகள் மற்றும் பிளாட்பாரம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

Tags : Honey Train Station , Theni, Madurai, Bodi, Indian Railways
× RELATED தேனி ரயில் நிலையத்தில் இரும்பு நடைமேம்பால பணி நிறைவு