சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட காவல்துறைக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் திடீர் கோரிக்கை

சென்னை: காவல் துறையினர் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட முதல்வர் அறிவுறுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்களின் நண்பனாக விளங்க வேண்டிய காவல் துறை பொதுமக்களை அடித்து துன்புறுத்தும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. காவல் துறையினர் பொதுமக்களை தாக்கும் செய்திகள் பத்திரிகைகள் மற்றும் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும், பாதிக்கப்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகுதான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. பத்திரிகைகளில் வெளிவராத நிகழ்வுகள் நிறைய இருக்கக்கூடும். தவறு செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எனவே தவறு செய்திருந்தால், தொடர்புடைய நபர்களிடம் உரிய விசாரணை நடத்தி அதற்கான ஆதாரங்களை திரட்டி, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டுமே தவிர, காவல் துறையினரே தாக்குதல் நடத்துவது என்பதை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இது மனித உரிமை மீறும் செயல். எனவே, தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, இதுபோன்ற காவல் துறை அத்துமீறல்கள் இனி நடைபெறாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். சட்டத்திற்குட்பட்டு செயல்படுமாறு காவல் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: