மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் டெல்டா பிளஸ் வைரசுக்கு முதல் பலி: தடுப்பூசி போட்டவர்கள் தப்பலாம்

போபால்: இந்தியாவில் புதிதாக பரவி வரும் டெல்டா பிளஸ் வைரஸ், மத்திய பிரதேசத்தில் முதல் பலியை வாங்கியுள்ளது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்து உருவான கொரோனா ‘டெல்டா வைரஸ்’, 2வது அலையில் பல லட்சம் பேரை கொன்றுள்ளது. இந்த வைரஸ் தற்போது மேலும் உருமாற்றம் அடைந்து, அதை விட வீரியமிக்கதாக  உருவாகி தாக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு, ‘டெல்டா பிளஸ்’ என பெயரிடப்பட்டு உள்ளது.  இது, கடந்த மே மாதத்தின் ஆரம்பத்திலேயே பல மாநிலங்களில் தாக்க தொடங்கி இருப்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. கடந்த சில நாட்களில் மட்டுமே, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 40 பேரை தாக்கியுள்ளது.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் இந்த வைரசால் நாட்டிலேயே  நேற்று முதல் பலி ஏற்பட்டது. இப்பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த மாதம் 17ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 23ம் தேதி அவர் இறந்தார்.

அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட கொரோனா வைரசின் மரபணு பகுப்பாய்வு செய்யப்பட்டதில், அவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது.  இவர் கொரோனா தடுப்பூசி போடவில்லை.  இந்த மாநிலத்தில் நேற்று வரையில் 5 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி ஒரு பெண்ணிடம் எடுக்கப்பட்ட மாதிரியில், டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

ஆனால்,  இந்த பெண் தடுப்பூசி போட்டு இருந்ததால் குணமாகி இருக்கிறார். மற்ற 3 பேரும் கூட தடுப்பூசி போட்டு இருந்ததால் குணமாகி விட்டனர்.  இந்நிலையில், மகாராஷ்டிரா, கேரளாவில் இதன் பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது பற்றி முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசித்து வருகிறார்.

85 நாடுகளில் டெல்டா

உலக சுகாதார அமைப்பு கூறுகையில், `கோவிட்-19  வாராந்திர தொற்று நோயியல் புதுப்பிப்பு தகவலின்படி, உருமாறிய டெல்டா வைரசின் ஆல்பா 170 நாடுகளிலும், பீட்டா 119 நாடுகளிலும், காமா 71 நாடுகளிலும், டெல்டா வைரஸ் 85 நாடுகளிலும் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. இதே நிலை நீடித்தால், மிக விரைவாக மேலும் பல நாடுகளில் பரவ வாய்ப்புள்ளது. டெல்டா வைரஸ் தற்போது 85 நாடுகளில் பரவி உள்ளது. இதில், கடந்த 2 வாரங்களில் மட்டும் 11 நாடுகளில் உருமாறிய டெல்டா பிளஸ் பரவி உள்ளது,’’ என்று தெரிவித்தது.

30 கோடி பேருக்கு தடுப்பூசி

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்கான கொரோனா பாதிப்பு, பலி உள்ளிட்ட விவரங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

* நேற்று ஒரே நாளில் 54,069 பேருக்கு புதிதாக தொற்று பாதித்ததை தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 82 ஆயிரத்து 778 ஆக உயர்ந்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில், 1,321 பேர் தொற்றுக்கு பலியாகினர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 981 ஆக உள்ளது.

* தொடர்ந்து, 42வது நாளாக பாதிப்போரின் எண்ணிக்கையை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

* இதுவரை, மொத்தம் 2 கோடியே 90 லட்சத்து 63 ஆயிரத்து 740 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

* நாடு முழுவதும் நேற்று 64.89 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டதை சேர்த்து, இதுவரை மொத்தம் 30.16 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories:

>