×

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை 3 தேசிய விருதுகள் பெற்ற பிரபல இயக்குனர் மரணம்

திருவனந்தபுரம்: மலையாள, இந்தி சினிமாவில் பிரபலமான பழம்பெரும் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சிவசங்கரன் மாரடைப்பால் மரணமடைந்தார். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன் நாயர் (89). புகைப்பட கலைஞரான இவர் கேரளா அரசின் முதல் புகைப்பட கலைஞராக இருந்தார். ஜவகர்லால் நேரு முதல் ஏராளமான தலைவர்களை இவர் புகைப்படம் எடுத்துள்ளார். மலையாள சினிமாவில் நிழல்பட கலைஞரானார். அதன்பின் ஒளிப்பதிவாளர் ஆனார். மலையாளம் மற்றும் இந்தியில் ஏராளமான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். மேலும் இவர், சொப்னம், அபயம், யாகம், கிழிவாதில், கேசு உள்பட பல மலையாள படங்களை இயக்கியுள்ளார். சில இந்தி படங்களையும் இயக்கி உள்ளார். இவருக்கு 3 முறை தேசிய விருது கிடைத்துள்ளது.

இவரது மகன்களான சங்கீத் சிவன், சந்தோஷ் சிவன், சஞ்சீவ் சிவன் ஆகியோர் பிரபல ஒளிப்பதிவாளர்கள் ஆவர். இவர்கள் 3 பேரும் தமிழ். இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றி உள்ளனர். சந்தோஷ் சிவன், படங்களையும் இயக்கியுள்ளார். சிவசங்கரன் நாயர் வயது முதிர்வு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவரது மரணத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



Tags : Santosh Sivan , The father of cinematographer Santosh Sivan has passed away
× RELATED சந்தோஷ் சிவன், மஞ்சுவாரியர் கூட்டணியில் சென்டிமீட்டர்