×

பிரிட்டன் போர்க்கப்பல் மீது ரஷ்ய படைகள் குண்டுமழை: பதிலடிக்கு தயாரான ஏவுகணை

மாஸ்கோ: கருங்கடலில் சென்ற பிரிட்டன் போர்க்கப்பலை தடுக்க ரஷ்ய படைகள் குண்டுமழை பொழிந்ததும், அவற்றுக்கு பதிலடி கொடுக்க ஏவுகணையை வீச பிரிட்டன் போர்க்கப்பல் தயாரானதும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கிரிமியா நாட்டுக்கு அருகில் உள்ள கருங்கடலுக்கு ரஷ்யா சொந்தம் கொண்டாடி வருகிறது. இப்பகுதியில் வெளிநாட்டு போர்க்கப்பல் செல்வதை அது தடுத்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டனுக்கு சொந்தமான பிரமாண்ட போர்க்கப்பல் அப்பகுதியில் நேற்று முன்தினம் சென்றது. உடனே, ரஷ்ய நாட்டு போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் அதை சூழ்ந்தன. பிரிட்டன் போர்க்கப்பல் முன்னேறி செல்வதை தடுப்பதற்காக, அதை சுற்றிலும் குண்டுமழை பொழிந்தன. இதனால், பிரிட்டன் கடற்படை வீரர்களும் ஆத்திரமடைந்து போர்க்கப்பலில் உள்ள ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த தயாராகி இருக்கின்றனர்.

ஆனால், ராணுவ தலைமை அதற்கு தடை போட்டதால் ஏவுகணையை வீசவில்லை என்று தற்போது தெரிய வந்துள்ளது. ஒருவேளை, பிரிட்டன் போர்க்கப்பல் ஏவுகணையை வீசி தாக்கி இருந்தால், இருநாடுகளுக்கும் இடையே அது மிகப்பெரிய போர் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று ராணுவ வல்லுனர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரிட்டன் போர்க்கப்பல் கருங்கடலில் ரஷ்யாவின் எல்லைக்குள்  அத்துமீறி நுழைந்தது. ரஷ்ய போர்க்கப்பல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி அதற்கு எச்சரிக்கை விடுத்தன. வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி விரட்டி அடித்துள்ளன.  இது தொடர்பாக மாஸ்கோவில் இருக்கும்  இங்கிலாந்து தூதரகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக வெளியுறவு துறை துணை அமைச்சர் செர்ஜி ரியாபாக் கூறுகையில், “அமைதியான வழிமுறை உதவாது என்றால் ரஷ்யா தனது ஆயுத படைகளை பயன்படுத்தி தனது எல்லைகளை பாதுகாக்கும். கப்பல் பயணிக்கும் பாதையில் மட்டுமல்ல, கப்பல் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்துவோம்’ என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.



Tags : Russian forces bomb US warship: missile ready for retaliation
× RELATED அர்ஜெண்டினாவில் அரசு...