×

சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய மேலும் 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக நடவடிக்கை

சென்னை: சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய மேலும் 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததையடுத்து, கட்சியை கைப்பற்ற சசிகலா ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக அதிமுக தொண்டர்களுக்கு தொலைபேசியில் பேசி ஆதரவு திரட்டி வருகிறார்.  அவர்களிடம் சசிகலா பேசும்போது, “மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவேன். ஒரு சிலர் தங்கள் வளர்ச்சிக்காக மட்டுமே கட்சியை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். தொண்டர்கள் ஆசையை நிறைவேற்றும் வகையில் அதிமுகவை மீட்பேன்” என்று கூறினார். இதையடுத்து சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உட்பட நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனாலும் சசிகலா தொடர்ந்து தொலைபேசி மூலம் அதிமுக நிர்வாகிகளிடம் பேசி வருகிறார்.

இந்நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய மேலும் 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் சேலம் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த ஏ.ராமகிருஷ்ணன் (போடிநாயக்கன்பட்டி - மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர்), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆர்.சரவணன் (மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்), ஆர்.சண்முகபிரியா (மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர்), திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திம்மராஜபுரம் ராஜகோபால் (மாவட்ட எம்ஜிஆர் மன்ற முன்னாள் இணை செயலாளர்), டி.சுந்தர்ராஜ் (தச்சநல்லூர் பகுதி மாணவர் அணி இணை செயலாளர்) ஆகியோர் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளனர்.

என்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி, ஓபிஎஸ்க்கு இல்லை : சிவகங்கை நிர்வாகி பேட்டி
சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சரவணன் சில நாட்களுக்கு முன் சசிகலாவிடம் போனில் பேசினார். அப்போது, ‘‘கட்சியை நீங்கள் தான் சரி செய்யவேண்டும். 4, 5 பேர் தங்களது சுயநலத்துக்காக கட்சியை பயன்படுத்துகின்றனர். தொண்டர்கள் உங்களைத்தான் நம்பியுள்ளனர். கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்று தெரிந்தே பேசுகிறேன். உங்களின் தியாகத்திற்கு முன் எனக்கு பதவி முக்கியமில்லை. பணம் தான் அனைத்தும் என தற்போதைய தலைவர்கள் நினைக்கின்றனர். தற்போதைய நிலையில் ஒற்றைத்தலைமை தான் வேண்டும். இபிஎஸ் துரோகம் செய்ய மாட்டார் என நினைத்தோம். உங்களால் அடையாளம் காட்டப்பட்ட நபர்களே சுயநலமாக யோசிக்கும் போது கஷ்டமாக உள்ளது.

நீங்கள் பின்வாங்கக்கூடாது’’ என பேசினார். அதற்கு சசிகலா, ‘‘எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் பின்வாங்க மாட்டேன். அமைதியாக ஒதுங்கி இருந்தேன். ஆனால் இப்போது கண்டிப்பாக வருவேன்’’ என தெரிவித்தார். இதுபோல் சண்முகப்ரியாவும், சசிகலாவிடம் பேசிய ஆடியோ வெளியானது. இதை தொடர்ந்து, இருவரும் கட்சியில் இருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளனர்.  நீக்கப்பட்ட சரவணன் கூறுகையில், ‘‘சசிகலாதான் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர். அவருக்கு மட்டும்தான் என்னை நீக்கும் அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் என்னை நீக்கியது செல்லாது’’ என்றார்.

சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் போட  செல்லூர் ராஜூ மறுப்பு?
மதுரை மாவட்ட அதிமுக, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், மதுரை புறநகர் மாவட்டம் சார்பில் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தலைமையிலும், மேற்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையிலும், மதுரை மாநகர் மாவட்ட பேரவை சார்பில் முன்னாள் எம்எல்ஏ சரவணன் தலைமையிலும், மாநில தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ராஜ்சத்யன் தலைமையிலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் போட்டு கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக உள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இதுவரை சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவில்லை.

இது குறித்து மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘‘இவர் கடந்த 2011 மற்றும் 2016ல் சசிகலா மூலமாகவே எம்எல்ஏ சீட் பெற்றார். சசிகலாவின் தீவிர ஆதரவாளர். அதனால், ‘‘அவசரப்பட வேண்டாம். சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின்பு பார்த்துக்கொள்ளலாம்’’ என செல்லூர் ராஜூ கூறிவிட்டார்’’ என்கின்றனர்.

Tags : Sasicila ,EPS ,OPS , 5 more fired from AIADMK for talking to Sasikala on phone: EPS, OPS joint action
× RELATED வேட்பாளர் படிவங்களில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்...