×

கொள்ளிடம் அருகே 40 பேரை பதம்பார்த்த விஷ வண்டுகள் அழிப்பு

*ஓடஓட விரட்டிதால் குளத்தில் குதித்து தப்பினர்

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே 40 பேரை தாக்கிய விஷ வண்டுகளை தீயணைப்பு படை வீரர்கள் அழித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் ஊராட்சியை சேர்ந்த மேலமாத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. இந்த மரத்தில் ஒன்பது இடங்களில் விஷ வண்டுகள் பல வருடங்களாக கூடுகட்டி வசித்து வந்தன. யாரையும் இதுவரை கடித்ததில்லை.

இந்நிலையில் இக்கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக ஒருவர் இறந்ததை முன்னிட்டு, அவருக்கு இந்த ஆலமரத்தடியில் நேற்று முந்தினம் உத்திரகிரியை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு கிராம மக்கள் கலந்து கொண்டனர். அங்கு புரோகிதர் யாக சாலை அமைத்து தீயை மூட்டி மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார். அப்போது கிளம்பிய புகை மேலே எழுந்து விஷ வண்டு தங்கியிருந்த கூட்டில் பட்டதையடுத்து, விஷ வண்டுகள் படையெடுத்து மரத்தின் அடியில் அமர்ந்திருந்தவர்களை தாக்க ஆரம்பித்தது.

அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தனர். சிலர் அங்கு அருகாமையிலுள்ள ஒரு குளத்துக்குள் இறங்கி விட்டனர். மந்திரம் ஓதிக்கொண்டிருந்த புரோகிதர் மேல் விஷ வண்டுகள் பறந்து வந்து தாக்க ஆரம்பித்தவுடன் அவர் தலைதெறிக்க ஓடிப் போய் ஒரு வீட்டிற்குள் புகுந்து கொண்டார். 40 பேரை விஷ வண்டுகள் விரட்டி கடித்தது. இதில் பலமாக கடித்ததில் 16 பேர் குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுகுறித்து சீர்காழி தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறை அலுவலர் ஜோதி தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் நேற்று மாலை கிரேன் உதவியுடன் ஒன்பது கூடுகளில் வசித்து வந்த லட்சக்கணக்கான விஷ வண்டுகளை இரவு 10 மணி வரை போராடி தீப்பந்தம் கொளுத்தி காட்டி அழித்தனர். விஷ வண்டுகளை முழுமையாக அழித்தவுடன் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.


Tags : Poisonous beetles, Destroyed, Kollidam
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை