×

ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணை திறப்பு

ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு, வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. நீர்ப்பிடிப்பில் தொடர் மழை மற்றும் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் கூடுதல் தண்ணீரால் அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயர்ந்தது.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்ததால் கடந்த 4ம் தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக, வைகை அணையில் இருந்து ஆற்றுப்படுகை வழியாக 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து, வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்றுகாலை திறக்கப்பட்டது. அணையின் சிறிய மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், பாசனத்திற்கும் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு என மொத்தமாக வினாடிக்கு 3,969 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை அணையின் இரு கரைகளையும் இணைக்கும் பாலம் தண்ணீரில் மூழ்கியது.

Tags : Vaik Dam ,Ramanadhapura District , Ramanathapuram, Vaigai Dam,Drinking Water
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்படும்...