×

மல்லையா, நீரவ், சோக்சியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ₹9,371 கோடி மதிப்புள்ள சொத்துகள் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு மாற்றம்

புதுடெல்லி: வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சியிடம் இருந்து முடக்கப்பட்ட சொத்துகளில், ரூ.9,371.17 கோடி மதிப்புள்ள சொத்துகள், அவர்களால் பாதிக்கப்பட்ட அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பெயருக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் பிரபல தொழிலதிபர்களாக விளங்கிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி, ஆகியோர் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன்களை வாங்கி, அவற்றை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர். இதனால், இந்த வங்கிகளுக்கு ரூ.22 ஆயிரத்து 585 கோடிக்கு இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், அமலாக்கத் துறை நேற்று வெறியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சியின் உள்ளூர், வெளிநாடுகள் தொடர்பான சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகள் குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி, இந்த 3 பேருக்கும் இந்தியாவில் உள்ள ரூ.18 ஆயிரத்து 170 கோடி மதிப்புள்ள சொத்துகளும்,  வெளிநாடுகளில் உள்ள ரூ.969 கோடி மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விசாரணைகளில் இந்த சொத்துக்கள் அனைத்தையும் இவர்கள் தங்களின் பெயரிலும், போலி பெயர்கள், 3வது நபர்கள் மற்றும் உறவினர்களின் பெயர்களில் வாங்கி குவித்து இருப்பது தெரியவந்துள்ளது.

 விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பிரிட்டன், ஆன்டிகுவா பார்டுடா நாடுகளில் தற்போது இருந்து வருவதால் அவர்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட நாடுகளின் உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு, அவர்களை நாடு கடத்தும் முயற்சியிலும் அமலாக்கத் துறை ஈடுபட்டு வருகிறது.  இந்நிலையில், இந்த மூன்று பேரிடமும் இருந்து முடக்கப்பட்டுள்ள மொத்த சொத்துகளில், ரூ.9 ஆயிரத்து 371 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள சொத்துகள், இவர்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுத்துறை வங்கிகளின் பெயர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீரவ் மோடி மனு தள்ளுபடி
வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி தந்து லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி இறுதியில் தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து, நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் கடந்த ஏப்ரலில் ஒப்புதல் வழங்கினார். இதை எதிர்த்து நீரவ் மோடி இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இதில் ஆவணங்கள் அடிப்படையில் அவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மேலும் 5 நாட்களுக்குள் நேரடி விசாரணைக்கு மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நீரவ் மோடி மேல்முறையீடு செய்ய நியாயமான எந்த காரணங்களும் இல்லாததால் அவர் நாடு கடத்தப்படும் நாட்கள் நெருங்கி விட்டன.

இழப்பில் 40%மீட்பு
* மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரால் வங்கிகளுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ.22,585.83 கோடி.
* இதில் ரூ.18,170.02 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
* முடக்கப்பட்டதில் ரூ.9371 கோடி மதிப்பிலான சொத்துகள் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் வங்கிகளின் மொத்த இழப்பில் 40 சதவீதம் வசூலாகி உள்ளது.

Tags : Mallya ,Neerav ,Choksi , Confiscated from Mallya, Neerav, Choksi Transfer of assets worth ₹ 9,371 crore to affected banks
× RELATED பத்திர பதிவு அதிகாரிகள் மாற்றம்