×

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்களித்து பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்விக்கான சேர்க்கை: ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிடம் உதயநிதி ஸ்டாலின், எழிலரசன் நேரில் வலியுறுத்தல்

சென்னை: நீட் தேர்வு தமிழகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும், சிக்கல்களையும் பற்றிய பரிந்துரைகளை அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிடம் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் நீட் தேர்வுகள் குறித்த கருத்துக்களை நேற்று அளித்தனர். தொடர்ந்து குழுவிடம் அறிக்கை ஒன்றையும் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: முத்தமிழறிஞர் கலைஞர் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்தார், உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழ்நாட்டுக்கு  நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றார். ஆனால் அதற்கு பிந்தைய ஆட்சியாளர்களின் காலத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது.

ஆனாலும் அது முதலே திமுகவின் இன்றைய தலைவர்  நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் குறிப்பாகத் தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரியும் போராடி வருகிறார். திமுக இளைஞரணியும்,  மாணவரணியும் இணைந்து சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிப் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். தமிழ்நாட்டின் முதுநிலை மற்றும் உயர் மருத்துவப் பிரிவுகளில் 50% இடங்களையும் இளநிலையில் 15% இடங்களையும் வலுக்கட்டாயமாக ஒன்றிய அரசு பறித்துக் கொண்டுள்ளது.  2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டப்பேரவைத்தேர்தல் பிரசாரங்களின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், இளைஞரணி செயலாளரான நானும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, பெற்றோர், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் நீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை தன்னெழுச்சியாக பதிவு செய்தனர்.

எனவே, இத்தகைய ஆபத்து நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் தமிழ் நாட்டு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தங்களுடைய பரிந்துரையை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.  நீட் தேர்வு மூலமாகத்தான் இனி மருத்துக் கல்வி என்று பிடிவாதமாக இருக்கும் ஒன்றிய அரசு, தான் நடத்தும் மத்திய கல்வி நிலையங்களில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு தேவையில்லை என்று விலக்கு அளித்துள்ளது. இது ஒன்றிய அரசினுடைய பாரபட்சமான இரட்டை நிலையைக் காட்டுகிறது.

மேலும் மாநில அரசினுடைய கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒன்றிய அரசு தன் ஆளுகைக்கு உட்பட்ட கல்வி நிலையங்களில் நீட் தேர்வு தேவையில்லை என்று விலக்களித்து உள்ளதுபோல் ஏற்கெனவே தமிழ்நாட்டிலும் நீட் தேர்வுக்கு விலக்களித்து முன்னர் இருந்த முறைப்படி பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ கல்விக்கான சேர்க்கை நடைபெறவேண்டும் இக்குழு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.Tags : Tamil Nadu ,Udayanithi Stalin ,Ehilarasan ,AK Rajan , NEED EXAMINATION, PLUS TWO SCORE, MEDICAL EDUCATION, AK Rajan
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...