முதல்வராக கலைஞர், ஜெயலலிதா இருக்கும் வரை நீட் வரவே இல்லை முதல்வராக எடப்பாடி பொறுப்பேற்ற பிறகுதான் தமிழகத்தில் நீட் தேர்வு வந்தது: அமைச்சர் ஆதாரத்துடன் விளக்கம்

சென்னை: திமுக ஆட்சியில் இருக்கிற வரை, முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரைகூட தமிழகத்தில் நீட் வரவே இல்லை.  எடப்பாடி முதல்வராக பொறுப்பேற்ற பிறகுதான் நீட் தேர்வு  தமிழகத்தில் வந்தது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதாரத்துடன் விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நீட் தேர்வை பொறுத்தவரைக்கும் கடந்த காலத்தில் திமுக நிர்வாகிகள், அதிமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஒரு கருத்தை சொன்னார்கள். 2010ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா ஒரு நோட்டிபிகேஷன் போட்டது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரே ஒரு வாரம் முன் பேட்டி கொடுக்கும்போது குறிப்பிட்டு காட்டினார். அப்போது அதிமுக ஆட்சி இல்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: என்னிடத்தில் இருக்கிற ஆவணம், நீட்டிற்கு ஒப்புதல் தர முடியாது என்று அன்றைய குடியரசு தலைவர் கையெழுத்திட்டு தந்த ஆவணம் இருக்கிறது.  இதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காதது மட்டுமல்ல, உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பிய தகவலையும் பதிவு செய்திருக்கிறது.  2010ல் நீட்டுக்கான சட்ட முன்வடிவை மத்தியஅரசு தயாரித்து தந்தபோது, தமிழக முதல்வராக இருந்த கலைஞர் நீதிமன்றத்துக்கு சென்று தடையாணை பெற்றதோடு மட்டுமல்லாமல், குடியரசு தலைவரிடத்திலும் அனுமதி பெற்று அன்றைக்கு அதை தமிழகத்தில் வர விடாமல் செய்தார். திமுக ஆட்சியில் இருக்கிற வரை நீட் தமிழகத்தில் வரவே இல்லை.

அதிமுக கட்சியின் தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரைகூட தமிழகத்தில் நீட் என்பது வரவே இல்லை. இவர் (எடப்பாடி) முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகுதான் நீட் தேர்வு தமிழகத்தில் தலைதூக்கியது. இதை யாராலும் மறுக்க முடியுமா?  அமைச்சர் பொன்முடி: கலைஞர், முதலமைச்சர் ஆனபிறகுதான் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு தணிக்கை குழுவை போட்டு நுழைவு தேர்வே தமிழகத்தில் நுழையாமல் பண்ணியவர் கலைஞர். நுழைவு தேர்வை கண்டிப்பாக எதிர்ப்பதற்காகத்தான் ராஜன் தலைமையில் முறையாக ஒரு குழுவையும் முதல்வர் நியமித்து அது சட்டம் மூலமாக செல்லுபடியாக்க வேண்டும் என்ற நிதானமான அடிப்படையில் நீட் தேர்வை எதிர்த்து கொண்டிருப்பவர்தான் தமிழக முதல்வர்.

எடப்பாடி பழனிசாமி: 2010ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது திமுக அந்த கூட்டணியில் இருந்தது. அப்போதுதான் நீட் கொண்டு வரப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின்: திமுகவை பொறுத்தவரை கூட்டணியில் இருந்தபோது விரும்புகிற மாநிலங்கள் அதை நிறைவேற்றலாம். கட்டாயம் கிடையாது. அப்போது நாங்கள் எதிர்த்தோம். தலைவர் கலைஞர் உச்ச நீதிமன்றம் போய் அதற்கு தடை வாங்கினார். அதற்கு பிறகு, கட்சிகளையெல்லாம் மறந்து, இதே அவையில் இரண்டு பேரும் அதாவது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் சேர்ந்து சட்ட மசோதா நிறைவேற்றி இருக்கிறோம். இரண்டு முறை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீட் நீக்கப்படும் என்று சொல்லவில்லை. நீட் நீக்குவதற்கான முயற்சிகளில் திமுக நிச்சயம் ஈடுபடும் அப்படி என்கிற உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்.

அதில் எந்த மாற்றமும் கிடையாது, பின்வாங்கவும் மாட்டோம். ஏற்கனவே பிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகளில் இதையும் சொல்லி இருக்கிறோம். ஒரு முறைக்கு இரண்டு முறை அழுத்தமாக சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். காரணம், தமிழகத்தில் உள்ள மாணவர்களின் உயிர்நாடி பிரச்னை இது. எத்தனை பேரை இழந்திருக்கிறோம் நாம். அதனால்தான் இதைமுறையாக நீதிமன்றத்தில் எப்படி அணுகுவது என்பதெல்லாம் யோசித்து, சிந்தித்து ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் அந்த குழு அறிக்கை அளிக்க வேண்டும். அதை வைத்து சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். நீட் பொறுத்தவரை எந்த காரணத்தை கொண்டும் திமுக எப்போதும் துணை நிற்காது. நிச்சயம் தமிழகத்திற்கு விலக்கு வாங்குவோம் நம்பிக்கை இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி: இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ரத்து செய்வதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். எனவே அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நீங்களும் தோள் கொடுங்கள், துணை நில்லுங்கள்.  நிச்சயமாக வெற்றிபெறுவோம்.

2 மணி நேரம்

பேசிய எடப்பாடி

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மதியம் 1.35 மணிக்கு தனது பேச்சை துவக்கி ெதாடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு விரைவாக பேசி முடியுங்கள். இப்படி குற்றச்சாட்டு கூறி பேசினால், நீண்டநேரம் விவாதம் நடைபெற வேண்டியதிருக்கும்” என்றார். இதற்கு பதில் அளித்த எடப்பாடி மாலை 5 மணி வரை கூட பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது என்றார். இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ”அலுவல் ஆய்வு கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர், இது கொரோனா காலம், ரொம்ப நேரம் உட்காரக்கூடாது, ஆபத்து என்று கூறி 3 நாட்கள் மட்டுமே நடத்த வேண்டும் என்றார்.இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி விரைவாக பேசி முடித்தார். அவர் மாலை 3.34 மணிக்கு பேசி முடித்தார். அதன்படி எதிர்க்கட்சி தலைவர் சுமார் 2 மணி நேரம் சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.

Related Stories:

>