கொரோனா நிவாரணம் ₹4,000 வழங்கியதால் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம்: திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

சென்னை: முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், கொரோனா நிவாரண நிதியாக ₹4 ஆயிரம் வழங்கியதன் மூலம் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம் என்று திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா (திமுக) பேசியதாவது:  கொரோனா நிவாரணமாக கடந்த ஆட்சியாளர்களிடம் ஒரு குடும்பத்திற்கு ₹5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று இப்போதைய முதல்வர் கோரிக்கை வைத்தார். ஆனால், நிதி இல்லை என்று கூறினீர்கள். அதே நேரம், தேர்தல் அறிவிக்கப்படும்போது மட்டும் குடும்பத்திற்கு தலா ₹2,500 வழங்க முடிகிறது. இன்று எங்கள் தலைவர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ₹4 ஆயிரம் வழங்கியிருக்கிறார்.

இப்போது மட்டும் நிதி எங்கிருந்து வந்தது. மக்களை பற்றி உண்மையாக சிந்தித்தார். அதனால் வழங்க முடிந்தது. இதன்மூலம் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை பார்க்கிறோம். இந்த ஆண்டு உணவு உற்பத்திக்கு 125   லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், டெல்டா   மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் சுமை தூக்கும்   தொழிலாளர்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்படவில்லை. ஏறக்குறைய தினமும் 800   மூட்டைகளை தூக்குகிறார்கள். அவர்களுக்கு தினக்கூலி ₹165 தான்   வழங்கப்படுகிறது. அதை உயர்த்த வேண்டும்.

 

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி: தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல்   நிலையங்களில் 2,608 பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு போதிய ஊதியம்   வழங்கப்படவில்லை என்று கோரிக்கை வந்துள்ளது. முதல்வர் அதற்கு விரைவில்   தீர்வு காண்பார். நேற்று நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து   விவசாயிகளுக்கு ₹164 கோடியே 73 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>