×

ஆபாச பேச்சு, பணம் பறிப்பு போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது பப்ஜி மதன் இன்ஸ்டாகிராம் பக்கம்

* மாணவர், பெண்களுக்கு சைபர் கிரைம் அறிவுரை
* 2ம் நாள் விசாரணையில் பல தகவல்கள் சிக்கின

சென்னை: பப்ஜி விளையாட்டை விபிஎன் சர்வர் மூலம் மதன் தனது லைவ் ஸ்டிரீமில் கொண்டு வந்தார். அதில் பங்கேற்ற பெண்கள் குறித்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசிவந்தார். மேலும், பல ஆதரவற்றவர்களுக்கு தான் உதவி வருவதாகக் கூறி பண மோசடியிலும் அவர் ஈடுபட்டார். இந்த விவகாரம் சர்ச்சையாகி பின் சைபர் கிரைமுக்கும், மத்திய குற்றப்பிரிவுக்கும் புகார்கள் குவிந்தது.  இந்த விவகாரம் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் மதன் மீது வழக்குப்பதிவு செய்து அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரின் மனைவி கிருத்திகாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களது 4 கோடி வங்கி பணம், விலை உயர்ந்த2 கார்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.

மேலும், போலீசாரின் பரிந்துரையை ஏற்று பப்ஜி மதனின் யூ-டியூப் பாஸ்வேர்டை யூ-டியூப் நிறுவனத்திடம் பெற்று மதனின் சேனலை முடக்கினர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மதனை போலீஸ் காவலில் எடுத்து ரகசியமாக விசாரித்து வந்தனர் அவரிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னென்ன பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதை எவ்வாறு நீக்குவது என்பது குறித்து தீவிரமாக விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அதன் மூலம் இளைய சமூகத்தினருக்கு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அறிவுரைகள் பல வழங்கியும், தவறு செய்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையையும் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், சைபர் கிரைம் போலீசாரின் அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கை பதிவுகளை குறிவைத்து ஒருபுறம் மதனின் ரசிகர் பட்டாளம் நக்கலும், நையாண்டியுமாய் கமெண்டுகளை பதிவிடத் துவங்கியுள்ளனர். அதில் பலர் மதனுக்கு ஆதரவாகப் பேசியும், சிலர் நக்கலாக தவறான பாதையில் சென்ற தங்களின் கண்களை திறந்துவிட்டது போலீஸ் என்பது போல் பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மற்றொரு புறம் பலரும் பப்ஜியை விடுத்து படிப்பில் கவனம் செலுத்துவதாகவும், தங்களை சரியான முறையில் வழிகாட்டிய காவல் துறையினருக்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து மதனிடம் நடத்திய விசாரணையில் மதன் ஆதரவற்றோருக்கு உதவுவது போல நடித்து பணப்பறிப்பில் ஈடுபட்டது சம்பந்தமாகவும், மேலும் தோழிகளுக்கு பணம் கொடுத்து ஆபாசமாக பேச வைத்ததாகவும், யூடியூப் மூலம் சம்பாதித்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளாரா என பல கோணங்களில் விசாரணை நடத்தினர். 2 நாள் போலீஸ் காவல் முடிந்து பப்ஜி மதன் நேற்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வருகின்ற 7ம் தேதி வரை வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மதன் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பப்ஜி மதனின் யூடியூப் சேனலுக்கு அட்மினாக இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள அவரது மனைவி கிருத்திகாவையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

சைபர் கிரைம் போலீசாரின் அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கை பதிவுகளை குறிவைத்து ஒருபுறம் மதனின் ரசிகர் பட்டாளம் நக்கலும், நையாண்டியுமாய் கமெண்டுகளை பதிவிடத் துவங்கியுள்ளனர்”

Tags : Babji Madan ,Instagram , Pornography, money laundering came under police control Babji Madan Instagram Page
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்