உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இந்திய அணியை வென்றது நியூசிலாந்து

சவுத்தாம்ப்டன் : ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ரோஸ் பவுல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசியது. இந்தியா முதல் இன்னிங்சில் 217 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 249 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

இதைத் தொடர்ந்து, 32 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 5ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன் எடுத்திருந்தது. இந்த போட்டியின் முதல் மற்றும் 4வது நாள் ஆட்டங்கள் கனமழை காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று 6வது மற்றும் கடைசி நாள் (ரிசர்வ் டே) ஆட்டம் நடைபெற்றது. புஜாரா 12, கோஹ்லி 8 ரன்னுடன் ஆட்டத்தை தொடர்ந்தனர். கோஹ்லி 13, புஜாரா 15 ரன் எடுத்து ஜேமிசன் வேகத்தில் அடுத்தடுத்து வெளியேறினர். ரகானே 15 ரன் எடுத்து போல்ட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் வாட்லிங் வசம் பிடிபட்டார். ஓரளவு தாக்குப்பிடித்த பன்ட் - ஜடேஜா ஜோடி 6வது விக்கெட்டுக்கு 33 ரன் சேர்த்தது. ஜடேஜா 16, பன்ட் 41 ரன் (88 பந்து, 4 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினர்.

அஷ்வின் (7), ஷமி (13), பும்ரா (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 2வது இன்னிங்சில் 170 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இஷாந்த் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசி. பந்துவீச்சில் சவுத்தீ 4, போல்ட் 3, ஜேமிசன் 2, வேக்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 139 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.

துவக்க ஜோடியான கான்வே (19), லாதம் (9) விக்கெட்டை அஷ்வின் கைப்பற்றினாலும், எளிய இலக்கு என்பதால் நியூசிலாந்து அணி தடுமாற்றம் இன்றி வெற்றியை வசப்படுத்தியது. கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி நிதானமாக ஆடி 96 ரன் சேர்க்க, நியூசிலாந்து அணி 45.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 140  ரன் எடுத்து வெற்றி பெற்றது. வில்லியம்சன் 52, டெய்லர் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐசிசியின் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்து கைப்பற்றியது. அந்த அணிக்கு முதல் பரிசாக ₹12 கோடியும், 2ம் இடம் பிடித்த இந்திய அணிக்கு 2வது பரிசாக ₹6 கோடியும் வழங்கப்பட்டது.

Related Stories:

>