×

யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து குரோஷியா முன்னேற்றம்

லண்டன்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் டி பிரிவில்  இங்கிலாந்து, குரோஷியா அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.   செக் குடியரசு, ஸ்காட்லாந்து  அணிகள் ஏமாற்றத்துடன் வெளியேறின. டி பிரிவு அணிகளுக்கான கடைசி லீக் போட்டி நேற்று நடந்தது. லண்டனில் நடந்த ஆட்டத்தில்  செக் குடியரசு - இங்கிலாந்து அணிகள் விளையாடின.  டிரா செய்தாலே அடுத்த சுற்று வாய்ப்பு என்ற நிலையில் 2 அணிகளும் களம் கண்டன.  அதனால்   கோல் அடித்து முன்னிலை பெறவும், அதே நேரத்தில் கோல் விழாமல்  தடுப்பதிலும் கவனமாக இருந்தன.  

ஆனாலும் ஆட்டம்  தொடங்கிய 12வது  நிமிடத்தில்  இங்கிலாந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் அற்புதமாக கோல் போட்டு தங்கள் அணிக்கு முன்னிலை கொடுத்தார்.  அதன் பிறகு ஆட்டம் நடந்த 78 நிமிடங்களில்  எந்த அதிசயமும் நடைபெறவில்லை. முடிவில் இங்கிலாந்து 1-0  என்ற கோல் கணக்கில்  செக் குடியரசை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள்  நுழைந்தது.

செக் குடியரசு, ஸ்காட்லாந்து வெளியேறின
 மற்றொரு டி பிரிவு ஆட்டத்தில்  குரோஷியா - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. வெற்றி மட்டுமே, அதுவும் அதிக கோல் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே  அடுத்த சுற்று வாய்ப்பு  என்ற நிலையில் இந்த அணிகள் மோதின.  முதல் பாதியின் 17வது நிமிடத்தில் குரோஷிய வீரர் நிகோலா வ்லாசிச், ஸ்காட்லாந்து வீரர்  காலம் மெக்ரெகர்  42வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அதனால் இரு அணிகளும் இடைவேளையின்போது 1-1 என சமநிலை வகித்தன. அதன்  பிறகு 2வது பாதியின் 62வது நிமிடத்தில்  குரோஷியாவின்  லூகா மோட்ரிச்,  77வது நிமிடத்தில் இவான் பெரிசிச் ஆகியோர் கோல் அடிக்க, அந்த அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று டி பிரிவில் இருந்து  2வது அணியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. டி பிரிவில் கடைசி 2 இடங்களை  பிடித்த செக் குடியரசு, ஸ்காட்லாந்து அணிகள் ஏமாற்றத்துடன் வெளியேறின.

Tags : Euro Cup ,England ,Croatia , Euro Cup, Football: England, Croatia
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது