முட்புதரில் இளம்பெண் சடலம் மீட்பு 5 சவரனை திருப்பிக்கேட்டதால் எரித்து கொலை செய்தேன்: கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்

அண்ணாநகர்: நொளம்பூர் சர்வீஸ் சாலையில் உள்ள காலி மைதானத்தில் முட்புதருக்குள் பெண்ணின் சடலம் கைகள் கட்டப்பட்ட நிலையில் எரிந்து கிடப்பதாக நேற்று முன்தினம் மதியம் நொளம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், தடயம் எதாவது கிடைக்கிறதா என அப்பகுதி முழுவதும் தேடினர். அப்போது, அப்பெண்ணின் ஆதார் கார்டு கிடைத்தது. அதன்மூலம், அவர் பெயர் ரேவதி என்பதும், இவர் நொளம்பூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர் எனவும் தெரியவந்தது. புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். அதில், மதுரவாயல் லட்சுமி நகர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த முருகன்(37), தனது மனைவி ரேவதி(34) காணாமல் போனதாக மதுரவாயல் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, ரேவதி வேலை பார்த்த மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அங்கு பேட்டரி ஆட்டோ மூலம் குப்பை அள்ளும் பணியை செய்து வந்த தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த திம்மப்பா(25) என்பவருக்கும் ரேவதிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திம்மப்பாவை நொளம்பூர் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் அவர் கூறியதாவது: கடந்த 16ம் தேதி என்னிடம் 5 சவரனை  ரேவதி கொடுத்திருந்தார். அந்த நகையை அடகு வைத்ததில் ₹35 ஆயிரம் கிடைத்தது. அதில் ரேவதிக்கு ₹20 ஆயிரம் கொடுத்துவிட்டு, மீதி பணத்தை செலவு செய்தேன். பின்னர் திடீரென ஒரு நாள் தனது 5 சவரனை திருப்பி தரும்படி ரேவதி கேட்டு தொந்தரவு செய்தார். இதனால், ஆத்திரமடைந்த நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

எனவே, செல்போனில் ரேவதியை தொடர்புகொண்டு, ஆசை வார்த்தை கூறி, மதுரவாயல் பைபாஸ் அருகே வர சொன்னேன். அதனை தொடர்ந்து, அங்கு வந்த அவரை எனது பைக்கில் ஏற்றிக்கொண்டு நொளம்பூர் சர்வீஸ் சாலையில் உள்ள காலி மைதானத்துக்கு வந்தேன். அப்போது அவர் தனது நகையை தரும்படி கேட்டு, வாக்குவாதம் செய்தார். நான்  ரேவதி வாயை துணியால் அடைத்து,  கை, கால்களை கட்டி கத்தியால் கழுத்தை அறுத்தேன். இதனால், அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து மயங்கினார். பின்னர் அங்கிருந்த குப்பைகளை அள்ளி வந்து, அதில் ரேவதியை வைத்து எரித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றேன் என தெரிவித்தார். இதனையடுத்து, திம்மப்பாவின் பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories:

More
>