×

கொரோனா ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை பேச விடாமல் மோடி அவமதிப்பு: மே.வங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா:   கொரோனா குறித்த ஆலோசனை கூட்டத்தின்போது எதிர்க்கட்சி தலைவர்களை பிரதமர் மோடி பேச அனுமதிக்கவில்லை என்றும், அவமதித்து விட்டதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு  சுமத்தி உள்ளார்.நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடு  நடவடிக்கைகள் குறித்து  10 மாநிலங்களை சேர்ந்த மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை  நடத்தினார். இதில் சில மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: மாநில முதல்வர்களுடனான  பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டமானது தோல்வியடைந்துவிட்டது.  பாஜ ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் மட்டுமே கூட்டத்தில் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.  மற்ற மாநில முதல்வர்கள்   கைப்பாவைகள் போல நடத்தப்பட்டனர். நாங்கள் பேசுவதற்கு பிரதமர் அனுமதிக்கவில்லை. நாங்கள் அவமதிக்கப்பட்டோம். அவமானப்படுத்தப்பட்டதாக  கருதுகிறோம். பிரதமரின் இந்த செயல்பாடானது  நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை  நசுக்கும்  ஒரு முயற்சியாகும். முதல்வர்களின் குரலுக்கு செவிசாய்க்காத அளவுக்கு பிரதமர் மோடி பாதுகாப்பற்றவர்.  கொரோனா நோய் தொற்று சூழலை மேற்கு வங்கம் எப்படி கையாளுகிறது, தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்டவை  குறித்து பிரதமர் மோடி விசாரிக்கவில்லை. மேலும் கறுப்பு பூஞ்சை குறித்து ஒரு கேள்வி கூட பிரதமரிடம் இருந்து வரவில்லை. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அப்படியென்றால்  ஒட்டுமொத்த பாதிப்பு குறைந்திருந்தால், ஏன் அதிக அளவில் கொரோனா உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றது?  நாட்டில் நிலவி வரும் கொரோனா நோய் தொற்று சூழலை கட்டுப்படுத்துவதற்கான சரியான திட்டங்கள் மத்திய அரசிடம் இல்லை. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.தொற்று இல்லாத  கிராமங்களை உருவாக்க வேண்டும்ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, “கொரோனாவினால் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும்  அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்ற கூற்றுக்கள் கவலையளிப்பதாக இருக்கிறது. கொரோனா தொற்று பரவலை கண்காணியுங்கள், அதன்  தீவிரத்தை பதிவு செய்யுங்கள்.  தடுப்பூசி வீணாவதை தடுக்க வேண்டியது அவசியம். வீணாக்கப்படும் ஒவ்வொரு டோசும் நோய்க்கு எதிரான ஒருவரது பாதுகாப்பு கவசத்தை மறுப்பதற்கு ஒப்பாகும். கிராமப்புறங்களில்  கொரோனாவை  அகற்றுவதற்காக பணியாற்றுங்கள். கொரோனா இல்லாத கிராமங்களை உறுதி செய்யுங்கள்.” என்றார்….

The post கொரோனா ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை பேச விடாமல் மோடி அவமதிப்பு: மே.வங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Corona ,Mae. Banga ,Chief Minister ,Mamta ,Kolkata ,West ,Dinakaran ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி