×

சேரன்மகாதேவி ராமர் கோயிலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

நெல்லை: சேரன்மகாதேவி ராமர் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியில் பழமையான ராமசாமி கோயில் அமைந்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கினால் தினசரி வழிபாடு மட்டும் பக்தர்கள் இன்றி நடத்தப்படுகிறது. இக்கோயிலில் பழமையான கல்வெட்டு உள்ளதாக நெல்லை வரலாற்று பண்பாட்டு மைய நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வரலாற்று பண்பாட்டு மைய இயக்குனர் மாரியப்பன், சேரன்மகாதேவி தமிழ்ப்பேரவை செயலாளர் பாலு மற்றும் மைய நிர்வாகிகள் ராஜேந்திரன், நந்தினி, அனுஷா, தங்கம், சூர்யா ஆகியோர் சேரன்மகாதேவி ராமசாமி கோயிலில் உள்ள கல்வெட்டுகளை அறநிலையத்துறை உதவியுடன் ஆய்வு செய்தனர்.
கல்வெட்டு கூடுதல் ஆய்வுக்காக மதுரை மாவட்ட முன்னாள் தொல்லியல் அலுவலர் சாந்தலிங்கத்துக்கு கல்வெட்டு குறிப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் மூலம் கல்வெட்டில் உள்ள வாசக விபரங்கள் தெரியவந்துள்ளன. அதில் இக்கோயில் பாண்டிய மன்னனான பராந்தக வீரநாராயணனால் (863-904) ஆண்டில் கட்டப்பட்டது. கோயிலில் உள்ள கல்வெட்டில் காணப்படும் வட்ட எழுத்துக்கள் சோழர் காலத்தில் வடிக்கப்பட்டது என்பது ஆய்வில் தெரியவந்தது.  மேலும் இக்கோயில் கருவறை அதிட்டானத்தில் உருளை வடிவ கல்லில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டில் ராஜராஜ சோழ மன்னனின் மகன் ராஜேந்திர சோழன் (1012-1044) மூன்றாவது ஆட்சி காலத்தில் அதாவது 1015ம் ஆண்டில் வடிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. ஆகவே இக்கல்வெட்டுக்கள் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆய்வில் தெரியவருகிறது.

இக்கல்வெட்டில் காணப்படும் தகவலில் ஊரின் பெயர் முள்ளிநாட்டு பிரம்ம தேயமான சோழ நிகரி சதுர்வேதி மங்கலம் என்றும், இறைவனை நிகரிலி சோழ விண்ணகர உடையார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு நந்தா விளக்கு ஒன்று தானமாக வழங்கப்பட்டுள்ளது. விளக்கு எரிக்க நெய்யும் தானமாக வழங்கப்பட்டுள்ளது. விளக்கு எரிக்க ஆழாக்கு அளவு நெய்யினை பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக ஊற்றி வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும் எனவும் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tags : Serenmagadevi Ramar , Cheranmakhadevi Ram Temple, Chola Inscription, Discovery
× RELATED ஊட்டிக்கு டிரைவராக சென்றவர் பஸ்சில் சடலமாக திரும்பினார்