×

இரண்டாம் தவணையாக கோவாக்சின் தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது: பொதுமக்கள் ஆர்வமுடன் வந்தனர்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 17,58,187 முதல் தவணை தடுப்பூசியும், 6,04,804 இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 23,62,991 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் தரவுகளை ஆய்வு செய்ததில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய காலத்தை கடந்து சுமார் 89,500 பேர் இருப்பது தெரிய வந்துள்ளது. 2ம் தவணை தடுப்பூசி செலுத்த தவறியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, 30,480 பேர் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

மேலும், தற்போதைய நிலவரப்படி சுமார் 59,000 பேர் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய காலத்தை கடந்து செலுத்தாமல் உள்ளனர். இவர்களில் கோவாக்சின் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு இன்றும் நாளையும் மாநகராட்சியின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி செலுத்தி கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை தடுப்பூசி முகாம் தொடங்கியது.

பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி   செலுத்தி கொண்டனர். மேலும் இந்த 2 நாள் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு ஏற்பாட்டிற்காக 62,050 கோவாக்சின் தடுப்பூசிகள் அனைத்து முகாம்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாம் குறித்த தகவல்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/vaccine_centers/ என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

Tags : covaxin vaccine, special camp
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...