×

4 ஆண்டுகளாக எலியும், பூனையுமாக சண்டையிட்ட துணை முதல்வர் கேசவ் வீட்டின் ‘படியேறிய’ முதல்வர் யோகி: பேரவை தேர்தலுக்கு முன் உ.பி பாஜகவில் திடீர் திருப்பம்

லக்னோ: உத்தரபிரதேச பேரவை தேர்தலுக்கு முன்னர் கடந்த நான்கு ஆண்டாக முதல்வர் - துணை முதல்வருக்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், துணை முதல்வர் கேசவ் வீட்டிற்கு முதல்வர் யோகி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா விவகாரம், சட்ட ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சரியாகக் கையாளவில்லை எனக்கூறி பாஜக எம்பி, எம்எல்ஏக்கள் கட்சித் தலைமையிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். அதையடுத்து, பாஜக தலைமையின் பிரதிநிதியாக கர்நாடகாவை சேர்ந்த சந்தோஷ், உத்தரபிரதேசத்தில் முகாமிட்டு அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே, யோகி ஆதித்யநாத், டெல்லி சென்று மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். நேற்று முன்தினம் முதல்வர் யோகி ஆதித்ய நாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, துணை முதல்வர் டாக்டர் தினேஷ் சர்மா, மாநில பொறுப்பாளர் ராதா மோகன் சிங் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக, முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவை சந்திக்க நேற்று அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு சென்றார். ஏற்கனவே, எலியும், பூனையுமாக இருவரும்  சண்டையிட்டு வந்த நிலையில், நேற்றைய திடீர் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்போது, துணை முதல்வர் தினேஷ் சர்மா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அனைருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமீபத்தில் திருமணமான கேசவ் மவுரியாவின் மகனையும், மருமகளையும் யோகி உள்ளிட்ட தலைவர்கள் ஆசீர்வதித்தனர். திருமண தம்பதியை வாழ்த்துவதற்காக யோகி, கேசவ் மவுரியாவின் வீட்டிற்கு வந்ததாக கூறப்பட்டாலும், அதில் அரசியல் நகர்வுகளும் உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கேசவ் மவுரியா, ‘உத்தரபிரதேச முதல்வர் யார் என்பதை டெல்லியில் இருக்கும் தலைமை முடிவு செய்யும்’ என்று பேசினார். அதனால், உத்தரபிரதேசத்தில் அடுத்த முதல்வராக கேசவ் மவுரியாவுக்கு தலைமை வாய்ப்பளிக்கும் என்று கூறப்படுகிறது. காரணம், 2017ல் நடந்த அப்போதைய தேர்தலின் போது முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிக்கவில்லை என்றாலும் கூட, கேசவ் மவுரியாவின் பெயர்தான் அடிபட்டது. ஆனால், கடைசி நேரத்தில் யோகி ஆதித்யாநாத்தை கட்சி தலைமை முதல்வராக தேர்வு செய்தது. இருந்தும் கேசவ் மவுரியாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஆட்சி அதிகாரத்தில் யோகியின் ஆதரவாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், துணை முதல்வராக இருந்தும் கேசவ் தனது சொந்த துறைக்கு உட்பட்ட அதிகாரிகளை கூட தனது விருப்பத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. எல்லாவற்றுக்கும் யோகியின் ஒப்புதலை பெற வேண்டியிருந்தது.

இத்தனை விவகாரங்களுக்கு மத்தியில் அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேசத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன. மாநில அமைச்சரவையில் மாற்றம், முதல்வர் யோகி மாற்றம், மாநிலத்தில் உள்ள மத்திய அமைச்சர்கள் மாற்றம் என்று கடந்த 2 வாரங்களுக்கு மேலாக உத்தரபிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், துணை முதல்வரின் வீட்டிற்கு யோகி சென்றிருப்பது மாநில அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருவருக்கும் நடந்த மோதல்கள்

* கடந்த 2017ல் பாஜக அரசு அமைந்த பின்னர், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் பெயர்ப்பலகை, முதல்வர் அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்டது. யோகிக்கும் கேசவுக்கும் மோதல் அதிகரித்ததால், இருவரின் அலுவலகமும் சட்டப்பேரவை செயலகத்தில் அமைக்கப்பட்டது.
* பொதுப்பணித்துறையை வைத்திருந்த கேசவின் செயல்பாட்டை முதல்வர் யோகி மறுஆய்வு செய்தார். அந்த துறை அதிகாரிகளை யோகி தனியாக சந்திக்க ஆரம்பித்திருந்தார். அப்போதைய கூட்டத்தில் கேசவ் பங்கேற்காமல் விலகியே இருந்தார்.
* ​​முதல்வர் யோகியின் கீழ் உள்ள லக்னோ மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழல் குறித்து கேசவ் பிரசாத் மவுரியா வெளிப்படையாக பேசினார். இதுதொடர்பாக விசாரணை நடத்தக் கோரி முதல்வருக்கு கடிதம் எழுதினார்.
* யோகி ஆதித்யநாத் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. ஆனால் கேசவ் பிரசாத் மீதான வழக்குகள் திரும்பப் பெறவில்லை. அவர் மீதான வழக்குகள் பிரதமர் அலுவலகம் வரை சென்ற பின்னரே கைவிடப்பட்டன.
* பொதுப்பணித் துறை அதிகாரிகள் நியமனம் தொடர்பாக கேசவ் பரிந்துரைக்கும் பெயர்களை முதல்வர் அலுவலகம் பலமுறை நிராகரித்தது. நிதி ஒதுக்கீடு கோரும் கோப்புகள் கடந்த 4 ஆண்டுகளில் பலமுறை முதல்வர் அலுவலகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டன. இது தொடர்பாக கேசவ் பிரசாத்துக்கும், யோகிக்கும் நேரடி வாக்குவாதங்கள் கூட நடந்துள்ளன.

Tags : Keshav ,Yogi ,House ,B Fajagah , Uttar Pradesh, BJP
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்