×

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூல் கூடாது-மாவட்ட கல்வித்துறை எச்சரிக்கை

தேனி : தேனி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு பணம் வசூலிக்கக் கூடாது என மாவட்ட கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இதையொட்டி 2019-20ம் கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் படித்த மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2020-21ம் கல்வியாண்டிலும் கொரோனா தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறக்கப்பட்டு ஓரிரு வாரங்கள் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு, மீண்டும் மூடப்பட்டன.

இதையடுத்து 2020-21ம் கல்வியாண்டிலும் படித்த அனைத்து வகுப்பு மாணவ, மாணவியர்களும் முழுமையாக தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.  
இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் சுயநிதி பள்ளிகளிலும் ஜூன் 14ம் தேதி முதல்  மாணவர் சேர்க்கை துவங்கப்படும் என அறிவித்தார்.

இதன்படி, தேனி மாவட்டத்தில் மாநில அரசின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதில், 1ம் வகுப்பு, 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை துரிதமாக நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் 326 அரசு ஆரம்பப் பள்ளிகள், 99 அரசு நடுநிலைப்பள்ளிகள், 36 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 70 அரசு மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 530 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இம் மாணவ, மாணவியர்களுக்கான பாடப்புத்தகங்களும் அந்தந்த பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுப்பி உள்ளது.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. அதேசமயம், அந்தந்த பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு தலா ரூ.25 முதல் ரூ.50 வரை மாணவ, மாணவியர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர விண்ணப்பக்கட்டணம் எனப்பெயர் சொல்லி எவ்வகையிலும் பணம் வசூலிக்க அனுமதியில்லை.

கடும் நடவடிக்கை

தேனி மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர்களிடத்தில் விண்ணப்பக் கட்டணம், பெற்றோர் ஆசிரியர் கழக கட்டணம், பள்ளி கட்டிட நிதி என ரசீது இல்லாமல் தலா ரூ.200 முதல் ரூ.300 வரை பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் கல்வி பயில எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.50 வரை வசூலித்துக்கொள்ளலாம். ஆனால், மாணவ, மாணவியர் சேர்க்கையின்போது எந்த பள்ளியிலாவது கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கூடுதல் கட்டணமாக செலுத்தியவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தனர்.

Tags : Academia Warning , Theni: The district education department has warned not to charge for the admission of students in government schools in Theni district.
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை