×

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபயிற்சிக்கு கட்டணம் நிர்ணயம்-பூங்கா திறப்பிற்கு பின் அமலாக வாய்ப்பு

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா வளாகத்தில் காலை நேரத்தில் நடைபயிற்சி  செல்ல மாதாந்திர கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்விற்கு பின்  அமல்படுத்த வாய்ப்புள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நூற்றாண்டு  புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. 22  எக்டேர் பரப்பளவில்  அமைந்துள்ள இப்பூங்காவில் பெரிய புல் மைதானம், கண்ணாடி மாளிகை, இத்தாலியன்  கார்டன், ஜப்பான் கார்டன், கள்ளி செடிகளுக்கென பிரத்யேக கண்ணாடிமாளிகை,  திசு வளர்ப்பு கூடம் உள்ளிட்டவைகள் உள்ளன.

நீலகிரிக்கு வர கூடிய  சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவை கண்டு ரசிக்காமல் செல்வதில்லை.  ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இப்பூங்கா  வளாகத்தில் காலை நேரத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள  அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டனர். இதற்கென  தனியாக கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. தற்போது கொரோனா  2வது அலையால்  ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளது. நடைபயிற்சி  மேற்கொள்ளவும் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த சூழலில் பூங்காவில்  நடைபயிற்சி மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை கட்டணம் நிர்ணயித்துள்ளது.

ஊரடங்கு  தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பூங்கா திறக்கப்பட்ட பின் அமலுக்கு வர  வாய்ப்புள்ளது. இது குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், ‘‘ஊட்டி  தாவரவியல் பூங்காவில்  நடைபயிற்சி மேற்கொள்வதற்கு கட்டணம்  நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.  இதன்படி மாதம் ஒன்றுக்கு ரூ.200 கட்டணம் செலுத்தி  பாஸ் பெற்று கொள்ளலாம். ஆண்டுக்கு ரூ.2400 கட்டணமாக செலுத்த வேண்டும்.  பாஸ் பெற்றிருப்பவர்கள் மட்டுமே நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். பூங்கா திறப்பிற்கு பின் நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது’’ என்றனர்.கொரோனாவால் பூங்கா மூடப்பட்டு  தோட்டக்கலைத்துறைக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Ooty Government Botanical Garden , Ooty: There is a monthly fee for morning walks at the Ooty Botanical Gardens. After the curfew is relaxed
× RELATED பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய ஊட்டி...