தாயகம் திரும்பியவர்கள் அமீரகம் செல்ல அரிய வாய்ப்பு: துபாய், சார்ஜா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல இன்று முதல் விமான சேவை

திருச்சி: வேலை வாய்ப்பு விசா வைத்துள்ளவர்கள் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், சார்ஜா உள்ளிட்ட நகரங்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அமீரகத்தில் இருந்து மட்டுமே இந்தியர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். அவ்வாறு சொந்த ஊருக்கு சென்றவர்கள் இந்தியாவில் இருந்து மீண்டும் அமீரகம் திரும்ப முடியாத நிலை உருவானது. இந்தநிலையில் இன்று முதல் பல்வேறு நிபந்தனைகளுடன் இந்தியாவில் இருந்து துபாய்க்கு வருகை புரிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

அதன்படி அமீரகத்தில் குடியிருப்பு விசா பெற்றவர்கள் மட்டும் துபாய் செல்ல தளர்வு அறிவிக்கப்பட்டது. அவ்வாறு துபாய்க்கு வருகை தரும் இந்திய பயணிகள் அமீரகம் அனுமதித்துள்ள கொரோனா தடுப்பூசிகளான பைசர் பயோஎன்டெக், ஸ்புட்னிக் வி, ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனிகா (கோவிஷீல்டு), சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றின் இரண்டு டோஸ்களை செலுத்தி இருக்க வேண்டும். மேலும் க்யூ.ஆர் கோட் ஐ ஸ்கேன் செய்யும் வசதியுடன் கூடிய, 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுக்கான ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும். 

பரிசோதனை முடிவுடன் விமானம் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ரேபிட் பிசிஆர் பரிசோதனையின் சான்றையும் வைத்திருக்க வேண்டும். அதனை அடுத்து துபாய்க்கு வருகை புரியும் விமான பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலவச பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் முடிவுகளானது 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்படும். அதுவரை பயணி தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் துபாய் செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: