சரத்பவார் தலைமையில் 15 கட்சித் தலைவர்கள் ஆலோசனை: 3வது அணி அமைக்கும் முயற்சியல்ல என அறிவிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் அல்லாத 3வது எதிரணியை உருவாக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கேற்ப, சமீபத்தில் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் 2 முறை சரத் பவாரை சந்தித்து பேசியது இதனை வலுப்படுத்துவதாக அமைந்தது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சரத் பவார் 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதன்படி, டெல்லியில் உள்ள சரத் பவாரின் இல்லத்தில் முக்கிய தலைவர்கள், கலைஞர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் துணைத் தலைவர் யஷ்வந்த் சின்கா, சமாஜ்வாடி மூத்த தலைவர் கன்ஷியாம் திவாரி, கவிஞர் ஜாவித் அக்தர், ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் ஜெயந்த் சவுதாரி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, ஆம் ஆத்மி கட்சியின் சுஷில் குப்தா, இந்திய கம்யூனிஸ்ட் எம்பி பினோய் விஸ்வம்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், உமர் அப்துல்லா கூட்டம் முடியும் முன்பே வெளியேறினார்.  

இக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்னைகளாக இருக்கும் கொரோனா தொற்று பரவல், வேலையின்மை, அரசு அமைப்புகள், நிறுவனங்களை தவறாக கையாளுவது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டம் குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி பினோய், ``இது தோல்வியுற்ற, மிகவும் வெறுக்கப்பட்ட அரசுக்கு எதிரான மதச்சார்பற்ற, ஜனநாயக அமைப்பாகும். மக்கள் மாற்றத்திற்கு தயாராக உள்ளனர்,’’ என்று கூறினார். சரத் பவார் தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் 3 வது அணிக்கு வித்திடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்  என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: