×

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் முன்னிலை பெற்றது நியூசிலாந்து: ஷமி அபார பந்துவீச்சு

சவுத்தாம்ப்டன்: இந்திய அணியுடனான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 32 ரன் முன்னிலை பெற்றது. ரோஸ் பவுல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசிய நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரோகித் 34, கில் 28, கோஹ்லி 44, ரகானே 49, ஜடேஜா 15, அஷ்வின் 22 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். நியூசிலாந்து பந்துவீச்சில் ஜேமிசன் 5, போல்ட், வேக்னர் தலா 2, சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து, 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 4வது நாள் ஆட்டம் கனமழையால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. ஏற்கனவே முதல் நாள் ஆட்டமும் இவ்வாறு பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வில்லியம்சன் 12 ரன், டெய்லர் (0) இருவரும் நேற்று 5வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். டெய்லர் 11 ரன் எடுத்து ஷமி வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த நிகோல்ஸ் 7 ரன் எடுத்து இஷாந்த் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். வாட்லிங் 1, கிராண்ட்ஹோம் 13 ரன் எடுத்து ஷமி பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். துடிப்பாக விளையாடிய ஜேமிசன் 21 ரன் எடுத்து ஷமி வேகத்தில் பூம்ரா வசம் பிடிபட்டார். நியூசிலாந்து 192 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெறப்போவது யார் என்ற சுவாரசியமான எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், வில்லியம்சன் - சவுத்தீ இணைந்து 8வது விக்கெட்டுக்கு 29 ரன் சேர்த்து தங்கள் அணிக்கு முன்னிலை கொடுத்தனர். அரை சதத்தை நெருங்கிய வில்லியம்சன் 49 ரன் எடுத்து (177 பந்து, 6 அவுண்டரி) இஷாந்த் வேகத்தில் கோஹ்லியிடம் பிடிபட்டார். வேக்னர் ரன் ஏதும் எடுக்காமல் அஷ்வின் சுழலில் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சவுத்தீ 30 ரன் (46 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஜடேஜா சுழலில் கிளீன் போல்டானார். நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 249 ரன் குவித்து (99.2 ஓவர்) ஆல் அவுட்டானது. போல்ட் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி 26 ஓவரில் 8 மெய்டன் உள்பட 76 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். இஷாந்த் 3, அஷ்வின் 2, ஜடேஜா 1 விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 32 ரன் பின்தங்கிய நிலையில் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடியது. இந்த போட்டிக்கு ஏற்கனவே கூடுதலாக ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டிருந்ததால், இன்று பரபரப்பான 6வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.



Tags : World Test Championship ,New Zealand ,Shami Apara , World Test Championship Final Leads New Zealand: Shami Apara bowling
× RELATED 2வது டெஸ்டில் போராடி வெற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா