யூரோ கோப்பை ‘நாக் அவுட்’ சுற்றுக்கு பெல்ஜியம் டென்மார்க் முன்னேற்றம்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின்  பி பிரிவில் இருந்து  பெல்ஜியம், டென்மார்க் அணிகள் ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறின. ரஷ்யா, பின்லாந்து அணிகள் வெளியேற்றப்பட்டன. யூரோ கோப்பை கால்பந்து தொடரின் பி பிரிவில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த லீக் ஆட்டத்தில்  பின்லாந்து - பெல்ஜியம் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே அசத்தலாக  விளையாடிய  பெல்ஜியம் வீரர்களால்,  முதல் பாதியில் கடுமையாக முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. இடைவேளைக்குப் பின்னர் தொடர்ந்த ஆட்டத்தின்  74வது நிமிடத்தில்  பெல்ஜியம் வீரர் அடித்த பந்தை  பின்லாந்து    கோல் கீப்பர் லுகாஸ் ஹராடெகி தடுக்க முயன்றார். ஆனால், அது அவர் மீது பட்டு சுயகோலாகியது.  81வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ரொமெலு லூகாகு  தன் பங்குக்கு கோல்  அடிக்க 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற  பெல்ஜியம்,  பி பிரிவில்  ஹாட்ரிக் வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்ததுடன் முதல் அணியாக கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தது.

டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற மற்றொரு  ஆட்டத்தில் ரஷ்யா- டென்மார்க் அணிகள் களம் கண்டன. வென்றால் அடுத்த சுற்று வாய்ப்பு உறுதி என்ற நிலையில் ரஷ்யா களம் கண்டது. தோற்றாலோ,  டிரா செய்தாலோ போட்டியில் இருந்து வெளியேறும் நிலையில் டென்மார்க் இருந்தது.  அதனால்  போட்டியில் வேகம் காட்டிய  டென்மார்க் வீரர்கள்  மிக்கேல்  டம்ஸ்கார்ட் (38வது நிமிடம்), போல்சன் (59’),    ஆண்ட்ரியாஸ் கிறிஸ்டென்சன் (79’),  ஜோகிம் மெய்ல் 82வது நிமிடத்தில் கோல் அடித்தனர். ரஷ்யாவுக்கு  கிடைத்த  பெனால்டி வாய்ப்பை அத்தியோம் திசியூபா ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் கோலாக்கினார்.  டென்மார்க் 4-1  என்ற கோல் கணக்கில் வென்றது. பி பி ரிவில் டென்மார்க், பின்லாந்து, ரஷ்யா ஆகிய 3 அணிகளும் தலா ஒரு வெற்றி மூலம் தலா 3 புள்ளிகள் பெற்றன. அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற டென்மார்க் 2வது இடத்தை பிடித்ததுடன் 2வது அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

கடைசி 2 இடங்களை பிடித்த  பின்லாந்து, ரஷ்ய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

Related Stories: